பணப்பரிவர்த்தனையை ‘ஒழித்த’ தென்னிந்தியாவின் முதல் ‘டிஜிட்டல்’ கிராமம்... ஏன்? | Why India's first digital village ended its cashless transaction

வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (26/10/2017)

கடைசி தொடர்பு:11:57 (26/10/2017)

பணப்பரிவர்த்தனையை ‘ஒழித்த’ தென்னிந்தியாவின் முதல் ‘டிஜிட்டல்’ கிராமம்... ஏன்?

பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்கப்படுத்தியது. ஏராளமான கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டது. அதைச் சாத்தியப்படுத்தி உள்ளது ஒரு கிராமம். ‘தென்னிந்தியாவிலேயே முற்றிலும் பணமில்லாப் பரிவர்த்தனையைக் கடைப்பிடிக்கும் முதல் கிராமம்' என்ற பெருமையை இப்ராஹிம்பூர் பெற்றது. ஹைதராபாத் அருகில் உள்ளது இந்தக் கிராமம் . இங்கு 370 குடும்பத்தைச் சேர்ந்த 1,200 பேர் வசிக்கின்றனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட பிறகு, அனைவருக்கும் டெபிட் கார்டு வழங்கப்பட்டது. வங்கிக்கணக்கு இல்லாதவர்களுக்கு ஆந்திர வங்கியில் கணக்குகள் தொடங்கப்பட்டன. 

ஆந்திரா வங்கியின் `மொபைல் வாலட்' என்ற ஆப்பை மக்கள் டவுன்லோடு செய்துகொண்டனர். ஒவ்வொருமுறை பரிவர்த்தனை செய்யும்போதும் அதுகுறித்த தகவல்கள் அனுப்பப்பட்டதால், மக்கள் உற்சாகமடைந்தனர். முக்கியமாக பெண்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்கள் மனைவி வைத்திருக்கும் காசைத் திருடுவதில் வல்லவர்கள். மனைவி சம்பாதிப்பதை அப்படியே பிடுங்கிக்கொள்வார்கள். டிஜிட்டல் கிராமம் ஆன பிறகு, பணப் பரிவர்த்தனைகள் கார்டு மூலம் நடைபெறுவதால், பெண்கள் அனைவரும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை பக்கம் சாய்ந்தனர். 

டிஜிட்டல் கிராமம்

டிஜிட்டல் கிராமம் என்ற வகையில் ராசைய்யா கடைக்கு pos கருவிகள் வழங்கப்பட்டன. கிராமத்தில் உள்ள மற்ற கடைக்காரர்களும் கருவிகளைப் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர வங்கி செய்தது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கருவிகளுக்கு எந்தக் கட்டணமும் பிடித்தம் செய்யப்படவில்லை. மார்ச் மாதத்திலிருந்து எந்த அறிவிப்பும் இல்லாமல் pos கருவிகளுக்குக் கட்டணமாக மாதம் 1,400 ரூபாய் பிடிக்கப்பட்டது. வங்கியின் இந்த நடவடிக்கையால் இப்ராஹிம்பூர் கடைக்காரர்கள் நொந்துபோனார்கள். இதனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை நிறுத்திவிட்டு, சாதாரண பணப் பரிவர்த்தனைக்கு மாறியுள்ளனர். இருவர் கருவியைத் திரும்ப வழங்கிவிட்டனர். ஒன்பது பேர் அதைப் பயன்படுத்துவதே இல்லை.

கருவி வழங்கும்போதே `பிப்ரவரி மாதம் வரைதான் இலவசம். அதற்குப் பிறகு கட்டணம் வசூலிக்கப்படும்' என்று கிராம மக்களுக்குத் தெளிவாக விளக்கப்பட்டது என ஆந்திர வங்கி விளக்கமளித்துள்ளது. இப்ராஹிம்பூர் கிராமத்தின் நுழைவிலேயே ராசைய்யா என்பவர்  பெட்டிக் கடை நடத்திவருகிறார். அவர் கூறுகையில், “இந்த ஊருக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை மட்டுமே பேருந்து வந்து செல்லும். அந்தச் சமயத்தில்தான் சிலர் கடைக்கு வருவார்கள். ஒரே வாழ்வாதாரம் இந்தக் கடைதான். மாதம் 6,000 ரூபாய் வருவாய் கிடைத்தது. அதிலிருந்து 1,400 பிடித்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்?'' என்று கேள்வி எழுப்புகிறார்.

இப்ராஹிம்பூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜ்பூர் கூறுகையில் “என்னிடம் இப்போது ஒரு ரூபாய்கூட இல்லை. ஒரு நாளைக்கு 200 - 250 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். அதை முழுவதுமாக என் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிடுவேன். பாதுகாப்பாகவும் எளிதாகவும் இருந்தது. வங்கிகள் கடைக்காரர்களிடம் கெடுபிடி காட்டுவதால், எல்லோரும் மீண்டும் சாதாரண பணப் பரிவர்த்தனைக்குத் திரும்பிவிட்டனர்” என்கிறார். திட்டங்கள் பல தீட்டினாலும் அவற்றை சீரான முறையில் செயல்படுத்துவதே அந்தத் திட்டத்துக்கு அழகு. பற்பல திட்டங்களை அறிமுகப்படுத்தி, படுகுழியில் இடுவது அரசுக்கோ மக்களுக்கோ ஆரோக்கியமானதல்ல.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்