“அது அப்போ... இது இப்போ..!” - வைரல் ஆகும் மோடியின் பழைய வீடியோ

அரசியல் தலைவர்கள் முன்னர் பேசிய சில வீடியோக்கள் காலம் கடந்து, பல ஆண்டுகள் கழித்து வைரல் ஆவது உண்டு. அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பேசிய வீடியோவும், 2015-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசிய பேச்சும் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாக பரவி வருகின்றன. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணான கருத்துகள்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுடன் உரையாடினார். பள்ளி மாணவர்கள் மோடியிடம் ஆர்வமாக தங்களது கேள்விகளை அப்போது முன்வைத்தனர், அதற்கு மோடியும் பதில் அளித்துக் கொண்டிருந்தார். ஒரு நிகழ்ச்சியில் அஸ்ஸாமைச் சேர்ந்த மாணவர்கள் பருவநிலை மாற்றம் பற்றிய தங்களது கேள்விகளை அவரிடம் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த மோடி, “பருவநிலை மாறவில்லை. நாம்தான் மாறிக் கொண்டிருக்கிறோம். நம் பழக்க வழக்கங்கள் மாறிவிட்டன. கடந்த 2013-ம் ஆண்டை விட இந்த ஆண்டு(2014) குளிர்ச்சியாக இருப்பதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது, அது முற்றிலும் தவறானது. வயது மூப்பின் காரணமாகத்தான் பருவநிலை நமக்கு குளிர்ச்சியாகத் தெரிகிறது” என்றார். 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலக பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, “பருவநிலை மாற்றத்தை இந்தியா ஒருபோதும் உருவாக்கியதில்லை. பருவநிலை மாற்றம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றம் பூமிக்குள் இருந்து கிடைக்கும் புதைப்படிவ எரிபொருட்களால் இயங்கும் தொழில்துறையின் காரணமாக ஏற்படுகிறது. அதனால் நாங்கள் இந்தியாவில் பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் நாட்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் பருவநிலை மாற்றம் பாதிக்கிறது. 7,500 கி.மீ கடற்கரையையும், 1,300 தீவுகளையும் கொண்ட இந்தியாவுக்குக் கடல் மட்டம் உயர்வது சற்று அச்சுறுத்தலைத் தருகிறது" என்றவர், கீழிறங்கி வந்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "இந்திய மக்கள் தங்கள் பழக்க வழக்கங்களை மாற்றினால்தான் சுற்றுச்சூழல் மாறும். தண்ணீர், காற்று, தாவரங்களை மனிதர்கள் நேசிக்க வேண்டும். இதற்கும் மேலாக நதிகள் நமது தாய் என்பதை மறந்து விட்டோம்" என்றார். 

பிரதமர் மோடி

இரண்டு வருடங்களில் பருவநிலை குறித்து இரண்டு வகையான கருத்துக்களை உதிர்த்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதனைத்தான் தற்போது நெட்டிசன்கள் வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இதே பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசுதான் ஹைட்ரோகார்பன் திட்டம், 2020-க்குள் இரு மடங்கு எண்ணிக்கையிலான அணு உலைகள், பெட்ரோ காம்ப்ளக்ஸ் திட்டம், என புதைபடிவ எரிபொருள் எடுப்பது உட்படப் பல திட்டங்களை அறிவித்திருக்கிறது. 2014-15-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டிலேயே சுற்றுச்சூழலுக்கான ஒதுக்கீடு 50 சதவிகிதமாக குறைக்கப்பட்டதையும் கவனிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், விவசாயிகள் தமது தொழிலை விட்டுவிட்டு நகர்ப்புறங்களுக்கு மக்கள் இடம்பெயர்ந்து விட வேண்டுமென்று திருவாய் மலர்ந்தார். பிரதமர் தேர்தலின்போது மோடி விவசாயிகளையும், சுற்றுச்சூழல்களையும் காப்பது பற்றி வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார். ஆனால், முந்தைய ஆட்சிக்கு தங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதைதன இந்த அரசும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!