வெளியிடப்பட்ட நேரம்: 18:35 (26/10/2017)

கடைசி தொடர்பு:08:44 (27/10/2017)

முத்திரைத் தாள் மோசடி மன்னன்’ தெல்கி மரணம்!

உடல்நலக் குறைவால் பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல் கரீம் தெல்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 56. 

கடந்த 2001-ம் ஆண்டில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போலி முத்திரைத் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதன்முறையாக வெளிவந்த அந்த மோசடிகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட கர்நாடகக் காவல்துறையினர், அதன் பின்னணியில் அப்துல் கரீம் தெல்கி என்பவர் இருப்பதைக் கண்டறிந்தனர். ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பரில் கைதுசெய்யப்பட்ட தெல்கிக்கு, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன், ரூ.202 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. 
தண்டனை காலத்தை பரப்பன அக்ரஹாரா சிறையில் அனுபவித்து வரும் தெல்கியின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர், பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்த நிலையில், உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்ட கர்நாடக மாநிலச் சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா, சிறையில் தெல்கிக்குச் சிறப்புச் சலுகைகள் செய்து கொடுக்கப்பட்டதாகப் புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.