”என் மகளின் மரணம் விபத்தல்ல...கொலை!” - கதறும் பைக் ரேஸர் சனாவின் தாய் #VikatanExclusive

சனா

பிரபல பைக் ரேஸர், சனா இக்பால். இவரது திடீர் மரணம், பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சனா இக்பால்'தற்கொலை மற்றும் மன அழுத்தத்துக்கு எதிராக' 2015-ம் ஆண்டு, இந்தியா முழுவதும் தனது பைக்கில் வலம்வந்த பெண் சாதனையாளர், சனா இக்பால். மன அழுத்தம் தொடர்பாக பல தன்னம்பிக்கை நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (24.10.17), தனது கணவர் அப்துல் நதீமுடன் வெளியே சென்றுவிட்டுத் திரும்பும்போது நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆனால், 'அது விபத்தே இல்லை... என் மகளின் மரணத்துக்கு அவளின் கணவர் அப்துல் நதீம்தான் காரணம்” என்று சனாவின் தாயார் ஷஹின் கான், காவல் துறையில் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே, தன் நண்பர்களுக்கு அனுப்பிய இமெயிலில், தன் கணவர் வீட்டார் செய்யும் கொடுமைகளை சனா இக்பால் மிகவும் வேதனையாக எழுதியிருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஷஹின் கானிடம் பேசினோம்.

“சனா மிகவும் பொறுமைசாலி. நைட் ஷிப்டில் வேலைப் பார்க்கிறாள். அன்றைக்கு வேலையை முடிச்சுட்டு இரண்டு மணிக்கு வீட்டுக்கு வந்தாள். அதேசமயம், எங்க வீட்டுக்கு வந்த அவளின் கணவன், சின்ன டிரைவ் போகலாம்னு அழைச்சார். சனா முதல்ல வரமாட்டேன்னுதான் சொன்னாள். அவர் விடாபிடியா அழைச்சுட்டுப் போனார். அப்படிப் போகாமல் இருந்திருந்தால், ரொம்ப பிரச்னை பண்ணியிருப்பார். அதனால்தான் சம்மதிச்சு போனாள். ஆனால், அவர் என் பொண்ணை கொலை பண்ண திட்டம் பண்ணியிருக்கிறார்னு இப்போ புரியுது. அவர் கொடுமை தாங்காமல்தான் இரண்டு வருஷமா எங்க வீட்டிலேயே இருக்கிறாள். அவள் கணவர் அடிக்கடி வீட்டு முன்னாடி நின்னு சத்தம் போட்றது, மோசமா பேசுறதுனு ரொம்ப பிரச்னை பண்ணிட்டே இருந்தார். அப்துல் நதீம், மாமியார் அனிஸ் அஜஸ் ரெண்டு பேரும் சேர்ந்து அடிக்கடி பணம் கேட்டு என் மகளைக் கொடுமைப்படுத்தினாங்க. என் மகளின் மரணத்துக்கு ஒருநாள் நியாயம் கிடைக்கும்” என்று வேதனையுடன் குமுறினார். 

சனா இக்பால்இதற்குப் பதிலளித்த அப்துல் நதீம், ‘'எங்களுடையது காதல் திருமணம். ஆனால், திருமணமாகி இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே சனா எங்க வீட்டில் இருந்தாங்க. கணவன், மனைவிக்குள் ஏற்படும் சகஜமான சில பிரச்னைகளே எங்களுக்கும் இருந்தது. அதுக்காக கவுன்சிலிங்கூட போயிருக்கோம். அதன்பிறகு அவங்க தாய் வீட்டுக்குப் போயிட்டாங்க. என்மீது சொல்லும் குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை. வீண் பழி சுமத்தறாங்க. நான் சனாவிடம் பணம் கேட்டு தொல்லை செய்வதாகச் சொல்றாங்க. அது பொய். சனாவையும் என் குழந்தை அலியையும் பார்த்துக்கற அளவுக்கு என்கிட்ட பணம் இருக்கு. சனாவிடம், நீ வேலையை விட்டு, குழந்தையைப் பார்த்துக்கனுகூட சொல்லியிருக்கேன். ஆனால், சனாவின் அம்மாதான், அவரை வேலைக்குப் போகச் சொன்னாங்க. சனா அவரோட சகோதரியின் திருமணத்துக்குப் பத்து லட்சம் வங்கிக் கடன் வாங்கியிருந்தாங்க. தன் பெயரில் இன்ஷூரன்ஸ் போட்டிருக்காங்க. அதற்கு நாமினியாக அவங்க அம்மாவைத்தான் குறிப்பிட்டிருக்காங்க. அவர் அம்மா தன் மகளை இழந்திருக்காங்க. அந்த வேதனை எனக்குப் புரியுது. ஆனால், நான் என் மனைவியை இழந்திருக்கிறேன்.'' என்கிறார்.

யார் சொல்வது உண்மை? அது, நிரந்தரமாக உறங்கிப்போன சனா இக்பாலுக்கு மட்டுமே தெரியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!