வெளியிடப்பட்ட நேரம்: 14:57 (28/10/2017)

கடைசி தொடர்பு:11:05 (30/10/2017)

வங்கி முதலீடு பற்றிய அருண் ஜெட்லியின் புதிய அறிவிப்பு! அலசுகிறார்கள் நிபுணர்கள்

 

அருண் ஜெட்லி

“மோடியின் ஆட்சியில் அறிவிப்புகளுக்கு இருக்கும் பிரமாண்டம், செயல்பாடுகளில் இல்லை” என்ற விமர்சனம் நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த பிரமாண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி. இந்த அறிவிப்புக்கு ஏற்றாற்போல் வரவேற்புகளும், விமர்சனங்களும் ஒருசேர வந்துள்ளன. 

“பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1.35 லட்சம் கோடி கடன் பத்திரங்கள் மூலமும், ரூ.18.000 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு மூலமும், ரூ.58.000 கோடி வங்கிப் பங்குகள் விற்பனை மூலமும் அளிக்கப்படும். அதன்மூலம் வங்கித் துறை வளர்ச்சி அடையும்; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். மேலும், சிறுகுறு தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், அந்தத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்” என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி வரி அறிவிப்புக்குப் பிறகு இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. “இது, பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தும்” என்று ஆளும்கட்சி சொல்லியிருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

தாமஸ் பிராங்கோஅகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மூத்தத் துணைத் தலைவர் டி.தாமஸ் பிராங்கோ, “ ‘பொதுத்துறை வங்கிகளுக்குக் கூடுதல் நிதி வேண்டும்’ என்று வங்கி அதிகாரிகள் சங்கம் சார்பில் ஏற்கெனவே நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இப்போதைய அறிவிப்பில் உண்மையாகவே அரசு மூலதனத்தை அதிகரிக்கும் ஏற்பாடு இல்லை. 2.11 லட்சம் கோடி ரூபாய் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அதில், பெரும்பகுதியாக 1.35 லட்சம் கோடியை கடன் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் என்கிறார்கள். அதாவது, மறுமூலதனத்துக்கான பத்திரங்கள் மூலம் நிதி திரட்டப்படும் என்கிறார்கள். அரசுக்கு வங்கிகள் லோன் தரும். அதைவைத்து பத்திரங்களை அரசு வெளியிடும். அதில், வரக்கூடிய பணம் மீண்டும் வங்கிக்கே வரும். அதாவது, இடது கையில் வாங்கி வலது கையில் கொடுப்பதைப்போல ஒரு வேலைதான் இது. புதிதாக இதில் எந்த நிதியும் வரப்போவதில்லை. இதுதான் உண்மையான கள நிலவரம். 

மேலும், மீதி இருக்கும் 76,000 கோடி ரூபாயில் 18, 000 கோடியை மட்டும் பட்ஜெட் மூலம் ஒதுக்க இருக்கிறார்கள். அதுவும், 'இந்திர தனுஷ் திட்டம்' மூலம் இந்த 18 000 கோடி ரூபாய் அறிவிப்பை ஏற்கெனவே  சொல்லிவிட்டார்கள். மீதி 58,000 கோடி ரூபாயை, ஏற்கெனவே உள்ள அரசுப் பங்குகளை விற்பதன் மூலம் திரட்டுகிறார்கள். அதாவது, இருக்கும் மூலதனத்தை விற்கும் வேலைதான் அது. ஒட்டுமொத்தமாக வாராக்கடனை வசூலிக்கவோ, அதிக மூலதனம் வைத்து கடன் கொடுக்கவோ பெரிய வாய்ப்புகள் உருவாகவில்லை. குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல்களைக் குறிவைத்தும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கோபத்தில் இருக்கும் மக்களைக் குளிர்விக்கவும்தான் இந்த அறிவிப்பு. இது ஏமாற்றுவேலை என்பதுதான் உண்மை” என்கிறார். நாகப்பன்

நிதி ஆலோசகர் வ.நாகப்பன் கூறுகையில், “வங்கிகளின் கணக்குப்படி வாராக்கடன் அதிகமாகியிருக்கிறது என்பது தெரிகிறது. ஆனால், உண்மையில் வாராக்கடன் என்பது அவர்கள் சொல்வதில் குறிப்பிட்ட அளவுதான் இருக்கும். ஏனென்றால், வாராக்கடன் என்பது குறித்து வங்கிகள் வைத்துள்ள விதிகள்தான் எவை வாராக்கடன் என்று சொல்கிறது. இந்த விதிகளில், மாற்றம் கொண்டுவர வேண்டும். குறிப்பாக, சிறு-குறு தொழில் துறையில் அரசுத் துறைகளுக்குச் சேவை செய்யும்போது அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைச் சுமார் 3 மாதங்களிலிருந்து ஒரு வருடம் கழித்துத்தான் கொடுக்கிறார்கள். சில அரசு நிறுவனங்கள் பல வருடங்கள் கழித்தே பணம் கொடுக்கின்றன. 

இந்தச் சூழ்நிலையில், அந்தச் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் வட்டியையோ, கடனையோ அடைக்கவில்லை என்றால், வாராக்கடன் என்று சொல்லிவிடுகிறார்கள். எனவே, அந்த விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும். மேலும், பெரிய தொழில் நிறுவனங்கள் பலநூறு கோடி வாராக்கடன் வைத்துள்ளன. அவர்களில் பலர்  இன்னும் நம்நாட்டில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். அவர்களில் சிலரையாவது உடனே பிடித்துச் சிறையில் போட்டாலே வாராக்கடன் வசூல் சூடுபிடித்துவிடும். அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள அரசு, இந்த அதிரடி நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும். 

இப்போதும், வாராக்கடன் சுமையை ஏராளமாக வைத்துக்கொண்டு, பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூடுதலாகச்  செய்யப்படும் ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு, இன்னும் வங்கிகளின் நிதிச்சுமையை அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். அதாவது, வங்கிகளின் சொந்தக்கடன் சுமை அதிகரிக்கும். இப்போது கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள இந்த நிதியை வாராக்கடன் இல்லாமல் எப்படி, கொடுக்கப் போகிறார்கள் என்பதுகுறித்து உரிய விதிகளை வகுக்க வேண்டும். பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட பிறகு பொதுமக்கள் பணம் அதிக அளவில் வங்கிகளில் உள்ளது. அதை வேறு வகையில் வெளியே கொண்டுவரத்தான் புதிய வழிகளில் திட்டம் வகுத்துள்ளார்கள். இப்போது, பணவீக்கம் கட்டுக்குள் இருக்கிறது. எனவே, கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்ட இது சரியான காலம்தான்” என்றார்.

அருண் ஜெட்லி அவர்களே உங்களின் புதிய அறிவிப்பு ஒருபுறம் இருக்கட்டும், பொதுத்துறை வங்கிகளில் உள்ள வாராக்கடன் சுமார் ரூ.12 லட்சம் கோடியின் நிலை என்ன..?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்