வெளியிடப்பட்ட நேரம்: 13:09 (29/10/2017)

கடைசி தொடர்பு:12:32 (30/10/2017)

அடி தூள்... வெறும் கைகளால் சிறுத்தையைச் சமாளித்த இளம் பெண்..!

மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோரினா மாவட்டத்தில் இருக்கிறது அந்தக் கிராமம். காடுகளின் மடியில் அமைந்திருக்கும் அழகான கிராமம். 25 வயது ஆஷாவின் சொந்த ஊர் அங்கிருந்து சில கிலோமீட்டர்கள். திருமணமாகி வந்ததுதான் இந்த ஊர். இரண்டு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தன் அம்மாவின் வீட்டுக்குப் போய்கொண்டிருந்தார். அவருடன் சூரியனும் வீடுதிரும்பிக்கொண்டிருந்த மாலை வேளை. ஊர் எல்லையைத் தாண்டும்வரை அறிமுகமான முகங்களை கடந்து வந்த ஆஷாவுக்கு, சிறிது தூரம் தாண்டியதும் கண்ணில்பட்ட அந்த முகம் அத்தனைப் பரிச்சயமில்லை. அது சிறுத்தையின் முகம்.

சிறுத்தையை

கோப்புப் படம்

புதர்களின் உள்ளிருந்து திடீரென வில்லன் என்ட்ரி கொடுத்த சிறுத்தையைக் கண்டதும் ஆஷாவுக்குப் பயம் தொற்றிக்கொண்டது. கையில் இரண்டு வயது குழந்தை. இரண்டு பேரையும் சுற்றிச் சுற்றி வந்த சிறுத்தை ஒரு கட்டத்தில் பாய்ந்திருக்கிறது. குழந்தையைக் காப்பாற்றியே தீருவேன் என நினைத்த ஆஷாவுக்கு தைரியம் வந்தது. வெறும் கைகளாலே சிறுத்தையை தாக்கியிருக்கிறார். அதன் கழுத்தைப் பிடித்து கடிக்க முடியாமல் தடுத்திருக்கிறார். இத்தனையும் நடக்கும்போதே உதவிக்கு குரலையும் எழுப்பியிருக்கிறார். சிறுத்தை, ஆஷாவின் கைகளில் நல்ல காயங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், கடிக்கவில்லை. அதற்குள் அருகில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் சத்தம் கேட்டு உதவிக்கு ஓடிவர, வில்லன் எஸ்கேப்.

அந்தப் பகுதி காடுகளில் சிலர் சிறுத்தையைப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், யாரையும் தாக்கியதாக இதுவரை எந்தச் சம்பவமும் பதிவாகவில்லை. அப்படியிருக்க, ஆஷா சிறுத்தையையே எதிர்த்தது பெரிய விஷயமாக அவர்களால் பாராட்டப்பட்டது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஆஷாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டிருக்கிறார்கள். “நான் நடந்துபோய்க் கொண்டிருந்தேன். வயலைத் தாண்டியதும் எங்கிருந்தோ என்மீது சிறுத்தை பாய்ந்தது” என பயம் விலகாமல் நடந்தச் சம்பவத்தை விவரித்திருக்கிறார் ஆஷா.

விஷயம் வன அதிகாரிகளுக்கு சொல்லப்பட, அவர்கள் விரைந்து வந்திருக்கிறார்கள். நடந்ததை எல்லாம் விசாரித்திருக்கிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் Pugmarks எதுவும் இல்லை என்கிறார்கள். (Pugmarks என்பது காட்டு விலங்குகளின் காலடித்தடம்.) வந்தது சிறுத்தைதானா என்பதில் வன அதிகாரிகளுக்குச் சந்தேகம். ஆனால், கிராமத்தினர் சிறுத்தைதான் என ஊர்ஜிதமாக சொல்கிறார்கள். ஆஷா உடம்பில் உள்ள காயங்களும் சொல்கின்றன.

இப்போது ஆஷா அந்தப் பகுதியின் வீரமங்கையாக பார்க்கப்படுகிறார். தைரியத்துக்கு அடையாளம் என்கிறார்கள். இவை எதுவும் புரியாமல் அந்த இரண்டு வயது குழந்தை மருத்துவமனையில் சிரித்துக் கொண்டிருக்கும். ஆஷா விரும்பியதும் அதுதான்.

 

சிறுத்தை:

பெண் சிறுத்தை ஒரு பிரசவத்தில் 2 முதல் 5 குட்டிகளைப் பெற்றெடுக்கும். குட்டியின் வாசனைகூட வெளியில் தெரியாத அளவுக்கு தடுப்பு வேலிகளை தாய் அமைக்குமாம். 18 மாதங்கள் முதல் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, தாயிடம் இருந்து தனியாக செல்வதற்கு சிறுத்தைக் குட்டி பழகிவிடும். பிற குட்டிகளுடன் சேர்ந்து திரியும். தாய் பூனை, தன் குட்டிப் பூனைகளுடன் மெல்லிய உறுமல் ஒலியுடன் பேசும். இதேபோலத்தான் சிறுத்தையும் தன் குட்டிகளுடன் பேசுமாம். ஆறு மாதத்தில் தன் குட்டிக்கு எப்படி வேட்டையாடுவது என்றும், பிற மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது பற்றியும் தாய் சிறுத்தை பயிற்சி கொடுக்கும். எனினும், பெரும்பாலான சிறுத்தைக் குட்டிகள் சிங்கங்கள், கழுதைப்புலிகளுக்கு இரையாகிவிடும் பரிதாபமும் நிகழ்கிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்