வெளியிடப்பட்ட நேரம்: 21:09 (29/10/2017)

கடைசி தொடர்பு:13:16 (30/10/2017)

"மனதின் குரல்" உரையில் மோடி என்ன பேசினார்? 

பிரதமர் மோடி - மனதின் குரல்

ந்தியாவின் எல்லைப்பகுதிகளை அல்லும், பகலும் அயராது பாதுகாத்து வரும் நம் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். உலகம் முழுவதும் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுவரும் அமைதி நடவடிக்கைகளுக்கு இந்தியா வலிமையான பங்களிப்பை அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய ஹாக்கி அணியினர் மற்றும் பல்வேறு துறைகளின் விளையாட்டு வீரர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி, அகில இந்திய வானொலியில் 'மனதில் குரல்' நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டு வருகிறார். அவரின் உரை, அனைத்து வானொலி நிலையங்களிலும், தூர்தர்ஷன் அலைவரிசைகளிலும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.

அதன்படி மோடி உரையாற்றுகையில், "எல்லைப்பகுதிகளில் நம் ராணுவ வீரர்களின் தீரமான செயல்பாட்டுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களின் முயற்சிகளை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இந்தியாவின் வீரம் மிக்க வீரர்களின் பின்னணிக் கதைகளை மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அண்மையில் ஜம்மு-காஷ்மீரின் குரேஸ் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் நான் தீபாவளியைக் கொண்டாடியபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். 

ஐ.நா.-வின் கீழ் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகளில் பல்வேறு நாடுகளில் அமைதியை நிலைநாட்டியதில் இந்திய பாதுகாப்புப் படையினரின் பங்கு முக்கியமானதாகும். ஐ.நா.-வின் இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியா எப்போதுமே உறுதியான பங்களிப்பை அளித்து வந்துள்ளது. 

இந்தியாவின் அமைதி நடவடிக்கைகளில் பரம்வீர் சக்ரா விருதுபெற்ற கேப்டன் குர்பச்சன் சிங் சலாரியா, லெப்டினென்ட் ஜெனரல் பிரேம் சந்த், ஜெனரல் கோடன்டரா சுபாயா திம்மய்யா ஆகியோர் சிறப்பான பங்களிப்பை அளித்திருப்பது நினவுகூரத்தக்கது. அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான செயல்பாடுகளினால் இந்த நாடு பெருமை கொள்கிறது

மனிதாபிமானத்துக்கும், மக்களின் நலன்களுக்கும் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்படும் முக்கிய நபர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

குருநானக், சகோதரி நிவேதிதா, சர்தார் படேல் போன்ற ஆகச்சிறந்த முக்கியஸ்தர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகளை நினைவுகூர்கிறேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சேவையாற்றும்போது, அத்தகையோரிடம் இருந்து மிக அதிகளவு பாடங்களைக் கற்க வேண்டியுள்ளது. ஏழை, எளிய மக்களுக்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துச் செயல்பட்டவர் நிவேதிதா. 

குருநானக்கின் 550-வது ஆண்டு தினம் 2019-ம் ஆண்டு வரவள்ளது. வாய்மை, நேர்மை, தியாகம் போன்றவற்றை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தவர் அவர். 

தவிர, நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேல், ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் கொண்டுவர வழிவகுத்தவர். புதிய இந்தியாவை உருவாக்குவதில் படேலின் எண்ணங்கள் இப்போதும் பயன்படுகின்றன. 

இந்திய மக்கள் அனைவரும் நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில், வரும் 31-ம் தேதி ஒற்றுமை ஓட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

மேலும், ஆசியக் கோப்பை போட்டியில் 10 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் பட்டம் வென்றுள்ள  இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டு தெரிவித்த மோடி, அன்றாட வாழ்வில், உடற்பயிற்சி இல்லாததே குழந்தைகள் நோய்த் தாக்குதலுக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டார்.

"இளம் வயதிலேயே குழந்தைகள் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோன்ற சூழ்நிலையைப் பெற்றோர் எதிர்கொண்டு, குழந்தைகளை வீட்டுக்கு வெளியே உடல் உழைப்புடன் கூடிய விளையாட்டுகளில் ஈடுபடுத்த வேண்டும். அண்மைக்காலமாக ஹாக்கி, பேட்மின்ட்டன், கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளில் இந்தியர்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக 17 வயதுக்குட்பட்ட இந்திய கால்பந்து வீரர்கள், உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஒட்டுமொத்த இந்தியர்கள் மனதிலும் இடம்பிடித்து விட்டனர்" என்றார். 

அனைத்து வயதினரும் யோகாசனத்தை வாழ்வில் ஒரு பகுதியாக கடைப்பிடித்தால், எந்தத் துறையானாலும் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்