’விமானம் கடத்தப்பட்டுவிட்டது!’ - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் ஏற்பட்ட குழப்பம்

ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக விமானத்தின் கழிவறையில் கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய பயணியை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. 

Bomb Threat
 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 9W 339 என்ற பயணிகள் விமானம் 115 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் இன்று அதிகாலை மும்பையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் கழிவறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ’இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது. விமானத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் அவசரமாக அகமதாபாத்துக்குத் திருப்பிவிடப்பட்டது. மும்பையிலிருந்து அதிகாலை 2.55 மணிக்குப் புறப்பட்ட விமானம் 3.45 மணிக்கு  அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. 

இதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை சோதனை செய்தனர். பயணிகள் ஒவ்வொருவரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணை சுமார் 6 மணி நேரம் நீடித்தது. விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்ட காலை 10.30 மணியளவில் விமானம் டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ, ‘ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டதாக கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய நபரை கைது செய்துவிட்டோம். அந்த நபருக்கு இனி விமானங்களில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!