வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (30/10/2017)

கடைசி தொடர்பு:19:40 (30/10/2017)

மக்களின் வலி பிரதமருக்குத் தெரியவில்லை..! ராகுல்காந்தி விமர்சனம்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்களை பிரதமர் நரேந்திர மோடி புரிந்து கொள்ளவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளன. நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்துவதற்கு காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளது. அதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், ராகுல் காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 'நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார். அதிலிருந்து பணமதிப்பு நீக்கத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மற்றும் உணர்வுகளை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது. நவம்பர் 8 இந்தியாவுக்கு சோகமான நாள். பணமதிப்பு நீக்கம் என்பது பேரிடர். அதைக் கொண்டாடுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. பண மதிப்பு நீக்கம் முதல் வெடிகுண்டு. ஜி.எஸ்.டியை அமல்படுத்திய முறை இரண்டாவது வெடிகுண்டு. ஜி.எஸ்.டி போன்ற நல்லத் திட்டத்தை எப்படி சிதைக்க முடியும் என்று பா.ஜ.க அரசு காட்டியுள்ளது' என்று பா.ஜ.க அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.