வெளியிடப்பட்ட நேரம்: 02:24 (31/10/2017)

கடைசி தொடர்பு:10:24 (31/10/2017)

'கம்யூனிஸ்ட் சக்சஸ்' என பினராயி அரசுக்கு 'வாஷிங்டன் போஸ்ட்' புகழாரம்!

கேரள முதல்வர் பினராயி விஜயனின் அரசுக்கு, 'கம்யூனிஸ்ட் சக்சஸ்' என 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை முன்பக்கத்தில் செய்தி வெளியிட்டுப் பாராட்டியுள்ளது.

பெரும்பாலான நாடுகளில், கம்யூனிஸம் தோல்வியைத் தழுவிவரும் நிலையில், கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி அரசு சிறப்பாக ஆட்சி புரிந்து வருவதாக,' தி வாஷிங்டன் போஸ்ட்' வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு முரண்பாடுகள் இருந்தாலும், மக்கள் நலனை முன்னிறுத்தி பினராயி அரசு செயல்படுகிறது என்றும் கம்யூனிஸம் இன்னும் உயிர்வாழும் பிரதேசமாக கேரளா உள்ளதாகவும் புகழ்பெற்ற அந்தப் பத்திரிகைக் கட்டுரையில் புகழாரம் சூட்டியுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் முன்பக்கத்தில் இந்தச் செய்தியை வெளியிட்டிருப்பதால், கேரள மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்கள்  உற்சாகமடைந்துள்ளனர்.  இந்தச் செய்தியை அதிகமாகப் பகிர்ந்துவருகின்றனர். அச்சுதானந்தன் காலத்தில்கூட மார்க்சிஸ்ட் கட்சி இத்தகைய உன்னத நிலையை கேரளாவில் எட்டியதில்லை எனவும் அவர்கள் கூறுகின்றனர். 

வாஷிங்டன் போஸ்ட் மட்டுமல்ல,  சமீபத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேரளத்துக்கு வந்திருந்தார். அப்போது, சுகாதாரத்துறை, மருத்துவம், கல்வி, பெண்கள் நலன்,  தகவல் தொழில்நுட்பத்துறைகளில் கேரளா முன்மாதிரி மாநிலமாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டார். கேரளக் கோயில்களில் அர்ச்சகர்களாகப் பல சாதியினரும் நியமிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கும் பினராயி அரசுதான் காரணம் என்ற வகையில், அவருக்கு பாராட்டு குவிந்தது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க