வெளியிடப்பட்ட நேரம்: 20:54 (31/10/2017)

கடைசி தொடர்பு:20:54 (31/10/2017)

"அதிர்ச்சி... இந்தியாவில் குறைந்துவரும் வேலைவாய்ப்புகள்...!" - ஏன்?

வேலைவாய்ப்பு

'இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது உண்மை' என்று தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்தால், ஆண்டுக்கு ஒருகோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பி.ஜே.பி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள பெருநிறுவனங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் வழங்கிய வேலைவாய்ப்புகள் குறித்து 'கேர் ரேட்டிங்' என்னும் நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவலில், "நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்புகளில் வளர்ச்சி ஏற்படவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"மொத்தம் ஆயிரத்து 473 பெருநிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 2014-2015-ம் நிதியாண்டில் 50 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ள நிறுவனங்கள், 2016-2017-ம் நிதியாண்டில் 51 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளன. இரண்டாண்டுகளில் வெறும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வேலைவாய்ப்புகள் மட்டுமே அதிகரித்துள்ளன.

இந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி ஏழு விழுக்காடு இருந்தபோதிலும், வேலைவாய்ப்பானது வெறும் ஒரு விழுக்காடு மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, வேலைவாய்ப்புகளை வழங்குவதில் மத்திய அரசு உடனடியாகத் தீவிர கவனம் செலுத்தியாக வேண்டும். சேவைத் துறையில் ஓரளவு வேலைவாய்ப்புகள் அதிகரித்த போதிலும், உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளன. வேலைவாய்ப்புகளை அளிப்பதில், வங்கித்துறை முதலிடத்திலும், தகவல் தொழில்நுட்பத்துறை இரண்டாமிடத்திலும் உள்ளன. சுரங்கத்துறை, எரிசக்தித்துறை, தொலைத்தொடர்புத்துறை போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் வீழ்ச்சியடைந்துள்ளன. 

வேலைவாய்ப்பு அலுவலகம்பெருநிறுவனங்களைக் காட்டிலும், அமைப்புரீதியில் இல்லாத தொழில்நிறுவனங்களே வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அதிகப்பங்கு வகிக்கின்றன" என்று அந்த நிறுவனம் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது. வேலைவாய்ப்புகள் தொடர்பாக ஒரு நிறுவனம் நடத்திய ஆய்வில் இது ஓரளவுதான் என்றும், இன்னும் அதிகளவிலான நிறுவனங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு மேற்கொண்டால் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு ஆண்டுகளை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புகள் திட்டமிட்ட வளர்ச்சியை எட்டவில்லை என்பது வேதனைக்குரிய தகவலாகும். எத்தனையோ துறைகளின் வளர்ச்சியை நோக்கி, மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றிக்கொண்டிருக்கும்போது, இந்தத் தகவலையும்  கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்துள்ளது.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையாக 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதியன்று பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த பின்னரும், நாட்டில் கறுப்புப் பணம் முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. சேகர் ரெட்டியோ, அம்பானிகளோ ... ஏன் நம்மூர் அரசியல்வாதிகளோ அல்லது பெருமுதலாளிகளோ வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் கியூவில் நிற்கவில்லை. சாமான்ய மக்கள்தான் கால்கடுக்க நின்று தங்களிடம் உள்ள சேமிப்புப் பணத்தை மாற்றுவதற்கு படாதபாடு பட்டனர்.

இதேபோல் கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டியால், எந்தவொரு வணிகர்களும், வர்த்தகர்களும், பெருமுதலாளிகளும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அன்றாட செலவுகள்தான் அதிகரித்துள்ளன என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. இன்னும் ஒன்றரை ஆண்டுகளில், அதாவது 2019-ம் ஆண்டு தொடக்கத்தில்  நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் சூழ்நிலையில், நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்திருப்பதுடன், வரி விகிதங்கள் அதிகரித்து மக்களின் தலையில் சுமைக்கு மேல் சுமை ஏறிக் கொண்டிருப்பதை அரசு சற்றே உணர்ந்து பார்க்க வேண்டும் என்பதுதான் நம் எண்ணம்...! 

என்ன செய்யப்போகிறது மத்திய அரசு?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்