குற்றப் பின்னணி கொண்ட எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்: விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

குற்றப்பின்னணி கொண்ட எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம்

``எல்லாவற்றுக்குமே தகுதித்தேர்வுகள் முக்கியம். ஆனால், அரசியலுக்கு மட்டும் எந்தத் தகுதியும் தேவையில்லையா?’’ என்ற கேள்வி எல்லாப் பக்கங்களில் இருந்தும் கேட்கிறது. இந்தியாவில் கிரிமினல் வழக்குப் பின்னணி கொண்டவர்களே எம்.எல்.ஏ-க்களாகவும் எம்.பி-க்களாகவும் இருப்பதுதான் புள்ளி விவரங்கள் சொல்லும் உண்மை. நாடாளுமன்ற மக்களவையின் 542 ‘மக்கள் பிரநிதி’களில் 185 எம்.பி-க்கள்மீது ‘கிரிமினல் கறை’ படிந்திருக்கின்றது. அதாவது, மொத்த எம்.பி-க்களில் 34 சதவிகிதம் பேர் கிரிமினல் பின்னணியினர். ஆளும் பி.ஜே.பி-யில்தான் அதிகபட்சமாக 98 எம்.பி-க்கள்மீது வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் எம்.பி-க்கள் 8 பேர்மீது வழக்கு உள்ளது. அ.தி.மு.க-வில் 6 பேர்மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 

கொலை, கொலை முயற்சி, கொள்ளை, ஆள் கடத்தல், ஈவ் டீசிங் என மிகக் கடுமையான வழக்குகளில் மட்டும் 112 எம்.பி-க்களுக்குத் தொடர்பு இருக்கிறது. கொலைவழக்கில் தொடர்புடைய 10 மக்களவை எம்.பி-க்களில் நான்கு பேர் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள்.  கொலைமுயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்ட 17 எம்.பி-க்களிலும் பி.ஜே.பி-தான் முன்னணி. 10 பி.ஜே.பி-யினர்மீது கொலைமுயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வகுப்புவாத விரோதம் தொடர்பான வழக்குகளில் 16 எம்.பி-க்களுக்குத் தொடர்பு உண்டு. இதில் 12 பேர் பி.ஜே.பி-யினர். வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் பங்குபெற்ற 10 எம்.பி-க்களில் பி.ஜே.பி-யினர் ஏழு பேர். இதேபோல் எம்.எல்.ஏ-க்களின் பட்டியல் தனி.

இதுபோன்ற குற்றப்பின்னணி கொண்ட எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்களின் விவரங்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஸ்வினி உபத்யாயா என்பவர் தொடுத்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பு விதித்து உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!