வெளியிடப்பட்ட நேரம்: 22:33 (31/10/2017)

கடைசி தொடர்பு:10:36 (01/11/2017)

எளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா 'சாதனை' முன்னேற்றம்!

ளிதாகத் தொழில் தொடங்கும் நாடுகளில், 130-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. 

தொழில் தொடங்கும் நாடுகள் பட்டியலில் இந்திய முன்னேற்றம்

உலக வங்கி வெளியிட்டுள்ள  2018-ம் ஆண்டுக்கான Ease of Doing Business index  பட்டியலில், இந்தியா அபார முன்னேற்றம் கண்டுள்ளது. 2014-ம் ஆண்டு 142-வது இடத்திலும், கடந்த ஆண்டு 130-வது இடத்தையும் இந்தியா பெற்றிருந்தது.  ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 190 நாடுகளில், வேறு எந்த நாடும் இவ்வளவு இடங்கள் முன்னேற்றம் காணவில்லை.

வரிவிதிப்புக் கொள்கையில் மாற்றம் கொண்டுவந்தது இந்தியா முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று சொல்லப்படுகிறது. நொடிந்துபோகும் நிறுவனங்களை மீட்பதில் 136-வது இடத்தில் இருந்து 103-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது. சர்வதேச அளவில் மிக வேகமாக தொழில்துறை வளர்ச்சியடைந்துவரும் நகரங்களில் மும்பை, டெல்லி முதல் 10 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. 

வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தப் பட்டியலில், இந்தியா 172-வது இடத்தில் இருந்து 119-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அதாவது 53 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ''முதல் 50-க்குள் இடம்பிடிப்பது பிரதமர் மோடியின் கனவு. 142-வது இடத்தில் இருந்து 100-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறோம். 50 இடங்களுக்குள் இடம் பிடிப்பது சாத்தியம்தான்'' எனக் குறிப்பிட்டுள்ளார். 

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டில், '' தொழில் மற்றும் வர்த்தகத் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் கொண்டுவந்த கொள்கை அளவிலான மாற்றத்துக்குக் கிடைத்த வெற்றி. எளிதாகத் தொழில் தொடங்கும் சூழல், நடுத்தர மற்றும் சிறு, குறுந் தொழில்கள் செழித்தோங்க உதவும் '' எனத் தெரிவித்துள்ளார். பட்டியலில், இந்த முறை நியூஸிலாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும், டென்மார்க் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன. சோமாலியா கடைசி நாடு. பாகிஸ்தானுக்கு 147-வது இடம். சீனாவின் இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த முறை 78-வது இடத்தில் இருந்தது. இப்போதும் அதே இடத்தில் தொடர்கிறது. 

இந்தியாவின் ஜி.டி.பி (உள்நாட்டு மொத்த உற்பத்தி) வெகுவாகக் குறைந்ததற்கு, பிரதமர் மோடி அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி போன்றவை முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உலக வங்கியின் அறிக்கை மத்திய அரசுக்கு தெம்பை அளித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க