வெளியிடப்பட்ட நேரம்: 12:37 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:41 (02/11/2017)

‘என்னைக் கொன்று விடுவார்கள்...!’ கலங்கும் ஹதியா... கண்டுகொள்ளாத சமூகம்

ஒரு பெண்ணுக்கு, தான் பிறந்த மதத்திலிருந்து வேறொரு மதத்தின்மீது நம்பிக்கை வருகிறது. அந்த மதத்தைப் பின்பற்றும் தோழிகளிடம் அதுகுறித்த புத்தகங்களைப் பெறுகிறாள். பிறகு, அந்த மதத்தைச் சேர்ந்த ஓர் ஆணைத் திருமணம் செய்துகொள்கிறாள். கேட்பதற்குப் பல இடங்களில் நடக்கும் கதைதானே தோன்றும்? ஆனால், கட்டமைக்கப்பட்ட சமூகத்தில் வாழ்க்கை அவ்வளவு இயல்பானதாக அமைந்துவிடுவதில்லை.

ஹதியா... இந்தப் பெயரை செய்திகளில் படித்திருக்கலாம். ஹதியாவாக மாறிய அகிலாவின் கதை, அவ்வளவு சாதாரணமானதல்ல.

ஹதியா

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கம் ஊரைச் சேர்ந்த அசோகன் மணி, பொன்னம்மா ஆகியோரின் மகள் அகிலா. 2015-ம் ஆண்டு சேலத்தின் ஒரு கல்லூரியில் சேர்ந்து இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் படிக்க ஆரம்பித்தார். விடுமுறை நாள்களில் தோழிகள் வீட்டுக்குச் சென்றதில், இஸ்லாம் மதத்தின்மீது பற்றுகொள்கிறார். இஸ்லாம் அவர் மனதுக்குள் ஆழமாக ஊடுருவுகிறது. டிசம்பர் 2015-ல் அவரது தாத்தா இறந்த சமயம், ஹதியாவாக வீட்டுக்கு வரும் அகிலா, இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவில்லை.

பிறகு, 2016 ஜனவரியில் மீண்டும் வீட்டுக்கு வரும் ஹதியா, தொழுகையில் ஈடுபடுகிறாள். இதைக்கண்ட பெற்றோர் கண்டித்து அனுப்புகிறார்கள். ஆனால், மகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதை அறிந்துகொண்டு சேலத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும்படி நிர்ப்பந்திக்கிறார்கள். ஹதியா தோழிகள் வீட்டில் தஞ்சம் அடைகிறாள். ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்யும் பெற்றோர், ஹதியாவின் தோழிகளான ஜஷினா மற்றும் ஃபஷினா ஆகியோர் மகளைக் கடத்தியிருக்கலாம் என்றும் மனுவில் குறிப்பிடுகிறார்கள். இதனிடையே, இஸ்லாம் பயில விரும்பிய ஹதியாவை, சத்திய சாரணி என்கிற நிறுவனத்தில் ஜஷினா மற்றும் ஃபஷினாவின் தந்தை அபுபக்கர் சேர்க்கிறார்.

ஆட்கொணர்வு மனுவை விசாரித்த நீதிமன்றம், ஹதியாவின் தந்தை தக்கல்செய்த மனுவைத் தள்ளுபடி செய்கிறது. ஹதியாவை தொடர்ந்து சத்திய சாரணியில் படிக்க அனுமதிக்கிறது. ஆகஸ்டு மாதம் அடுத்த ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல்செய்கிறார் ஹதியாவின் தந்தை அசோகன். இதனிடையே, செபின் ஜஹான் என்பவருடன் ஹதியாவுக்கு நிக்காஹ் முடிவாகிறது. தனது மகளை யாரோ ஏமாற்றி மதம் மாற்றி தீவிரவாத அமைப்புகளில் சேர்த்து வெளிநாட்டுக்கு கடத்த முயல்வதாக (லவ் ஜிஹாத்) சொல்கிறார் அசோகன். அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று தன் தந்தைக்கு கடிதம் அனுப்புகிறார் ஹதியா. திருமணமும் முடிந்துவிடுகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்தத் திருமணத்தை ’லவ் ஜிஹாத்’ என்று சொல்லி, திருமணத்தை ரத்துசெய்கிறது. ஹாதியாவுக்கு செல்போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்த தடையும், அதைக் கண்காணிக்க ஒரு பெண் காவலரையும் நியமிக்கிறது.

24 வயது நிரம்பிய ஹதியா, புரியாமல் முடிவெடுத்திருப்பதாகவும், பெற்றோரின் அனுமதி இல்லாமல் செய்த இந்தத் திருமணத்தை ஏற்க முடியாது என்றும் தீர்ப்பு சொல்கிறது. தற்போது பெற்றோருடன் இருக்கும் ஹதியா, தான் தாக்கப்படுவதாகவும் கொலை மிரட்டல்கள் இருப்பதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்காக, உச்சநீதிமன்றத்தில் ஹதியாவின் கணவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரிக்க நவம்பர் 27-ம் தேதி ஹதியாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோபால் மேனன்

“ஹதியாவின் கணவர் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார். அவர்களுடையது காதல் திருமணம் இல்லை என்றாலும், அவர்களுக்கிடையே இருக்கும் காதல் விவரிக்க முடியாதது. ஹதியா வழக்கில் நீதிமன்றம் நடந்துகொண்டது தனி மனித உரிமையை மறுப்பதாக உள்ளது” என்கிறார் ஹதியா குறித்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கும் கோபால் மேனன்.

கேரளாவில் 'லவ் ஜிஹாத்' அதிகம் நடைபெறுவதாக முன்பு குற்றச்சாட்டு எழுந்தபோது, அப்படி எதுவும் நடப்பதில்லை என்று காவல் துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ”கேரளாவில் லவ் ஜிஹாத் நடக்கிறதோ இல்லையோ, சொந்த மதத்துக்குத் திரும்புங்கள் என்ற பெயரில், வேற்று மதத்து ஆண்களைத் திருமணம் செய்துகொண்ட பெண்களை, யோகா மையங்கள் என்ற பெயரில் அடைத்துவைத்து கொடுமை செய்யும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இந்தக் கொடுமைகளை அனுபவித்த ஒரு பெண், அங்கிருந்து தப்பிவந்து, நீதிமன்றத்திலும் மீடியாவிலும் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னது உண்மைதான் என்பது பின்னர் நடந்த விசாரணையில் தெரிந்தது” என்கிறார் கேரளாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர். 

இன்றைய இந்தியாவில் பெண்கள் உடல் நிறைய நகைகளை அணிந்து நள்ளிரவில் வெளியே செல்வதைக் காட்டிலும், விரும்பிய மதத்தில், விரும்பிய நபரைத் திருமணம் செய்வதே அபாயகரமான செயலாக இருக்கிறது.


டிரெண்டிங் @ விகடன்