வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:05 (02/11/2017)

பிரியாணிக்காகத் தகராறு..! உத்தரப்பிரதேசத்தில் வழக்கறிஞருக்கு சரமாரி அடி

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் பிரியாணியை யார் முதலில் பெறுவது என்பதில் ஏற்பட்ட மோதலில், வழக்கறிஞருக்கும் அவருடைய நண்பருக்கும் பலத்த அடி விழுந்தது.  


உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்யவ்ரத். இவர் தன் நண்பர் சதேந்திர சிங்குடன் லக்னோ பிரஸ் கிளப் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று மதிய உணவு சாப்பிடச் சென்றார். இருவரும் பிரியாணி ஆர்டர் செய்தனர். 10 நிமிடம் ஆகியும் பிரியாணி வரவில்லை. இதற்கிடையே இவர்களின் இருக்கைக்கு அருகே இன்னொரு கும்பல் பிரியாணி சாப்பிட அமர்ந்தது. ஹோட்டல் தொழிலாளி, சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்குக்கு முதலில் பிரியாணி வழங்காமல், அவர்களுக்கு அருகே அமர்ந்தவர்களுக்கு பிரியாணி வழங்கினார். 

ஆத்திரம் அடைந்த சதேந்திர சிங், இதைத் தட்டிக் கேட்டார். இதனால் ஹோட்டல் தொழிலாளிக்கும் சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஹோட்டல் மேலாளர் உத்தம் சங்கருடன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, உத்தம் சங்கர் மற்றும் ஹோட்டல் தொழிலாளிகள் இணைந்து துப்பாக்கியின் பின்பகுதியால் சத்யவ்ரத் மற்றும் சதேந்திர சிங்கை தாக்கி ஹோட்டலை விட்டு வெளியே தள்ளினார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். 

- பிரதீப்