வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (02/11/2017)

கடைசி தொடர்பு:16:40 (02/11/2017)

’கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை’- குஜராத்தில் முழங்கிய ஜிக்னேஷ் மேவானி

’குஜராத் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் கூட்டணி இல்லை’ என ஜிக்னேஷ் மேவானி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

ஜிக்னேஷ்

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பி.ஜே.பி ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.

இதில் ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சியுடன் இணைய உள்ளதாகவும், இதற்காக குஜராத்தில் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தியை சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இத்தகவலை முற்றிலுமாகப் மறுத்துள்ளார் ஜிக்னேஷ் மேவானி. அவர் கூறுகையில், “காங்கிரஸ் உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்பதுதான் ஒட்டுமொத்த நிலைப்பாடு. பா.ஜ.க-வினர் யாரும் என்னைச் சந்திக்கவும் தயாராக இல்லை. இதனால் எந்தவித ரகசிய சந்திப்புகளுக்கும் வாய்ப்பில்லை” எனக் கூறியுள்ளார்.