கிச்சடி தேசிய உணவா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மத்திய அமைச்சர்

கிச்சடி தேசிய உணவு இல்லை என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் விளக்கமளித்துள்ளார்.

ஹர்ஷிம்ரத் கவுர் பாதல்

 

இந்திய உணவு வகைகளை உலக அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் டெல்லியில் ’கிரேட் இந்தியா ஃபுட் ஸ்ட்ரீட்’ என்ற பெயரில் 3 நாள்கள் உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. அந்த நிகழ்ச்சியில் 800 கிலோ கிச்சடி மக்கள் முன்னிலையில் வரும் 4-ம் தேதி தயாரிக்கப்படுகிறது. 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 7 அடி விட்டம் கொண்ட மிகப்பெரிய சட்டியில் கிச்சடியை நாட்டின் புகழ்பெற்ற சமையல் கலைஞர்களுள் ஒருவரான சஞ்சீவ் கபூர்  சமைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை ஒருங்கிணைக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் கிச்சடி தயாரிக்கப்பட இருப்பதால், அதுவே நாட்டின் தேசிய உணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சமூக வலைதளங்களில் இந்த விவகாரம் காட்டுத் தீபோல் கடந்த சில நாள்களாகப் பரவி வருகிறது. இந்தநிலையில், `உலக அளவில் இந்திய உணவுகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ஒரு சாதனை முயற்சியாகவே 800 கிலோ அளவில் கிச்சடி செய்யப்படுகிறது. கிச்சடியைத் தேசிய உணவாகத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறப்படும் கதைகளை நம்ப வேண்டாம்’ என்று உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் பாதல் விளக்கம் அளித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!