தொழில்துறையில் சிறந்து விளங்கும் நாடுகளிடையே முன்னேறும் இந்தியா!

தொழில் செய்வதற்கான சூழலில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது... அதுவும் ஒரே வருடத்தில்! தொழில் துறையில் சிறந்துவிளங்கும் நாடுகளின் பட்டியலை உலக வங்கி ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும். கடந்த வருடப் பட்டியலில் 130 வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 100 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. விரைவில் 50 வது இடத்தை எட்டிப்பிடிக்கும் என நம்பலாம். 

`சும்மா அடிச்சுவிடாதீங்க பாஸ்!' எனப் பலரும் நினைக்கலாம். அதிசயம்தான். ஆனால் உண்மை. இந்தியா, கடந்த சில ஆண்டுகளில் செய்த சீர்திருத்தங்கள் மூலம் உலக அரங்கில் இந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறது. எந்தவொரு நாடும் ஒரே வருடத்தில் இந்த அளவுக்கு முன்னேறியதில்லை. மொத்தம் 190 நாடுகளை அலசி ஆராய்ந்த உலக வங்கியின் அறிக்கையில் இந்தியா வளர்ச்சி அடைந்ததற்கான காரணங்களையும் பட்டியலிட்டுள்ளது.   

இந்த ஆய்வுக்குக்குப் 10 முக்கியமான விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டுள்ளது உலக வங்கி. இந்தப் 10 விஷயங்களும்தான் தொழில் நல்ல முறையில் நடப்பதற்கு வழிவகுக்கும் முக்கியமான காரணிகள். இவற்றில் எந்த மாதிரியான வளர்ச்சியை ஒரு நாடு அடைந்திருக்கிறதோ அதைப் பொறுத்தே அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அமையும். அந்தப் பத்து விஷயங்களில் இந்தியா என்ன வளர்ச்சியை அடைந்திருக்கிறது எனப் பார்க்கலாமா?

1. பிசினஸ் தொடங்குதல்: பிசினஸ் தொடங்குவதில் நாம் உலக அரங்கில் 156-வது இடத்தில் இருக்கிறோம். நிறுவனப் பதிவு, பான் எண் இணைப்பு மற்றும் வரி செலுத்தும் எண் போன்றவற்றை ஆன்லைன் மூலமே செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

2. கட்டுமான அனுமதி: இதில் நம் நாடு 181-வது இடத்தில் உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது கட்டுமான அனுமதி பெறுதல். இதில் நாம் சற்று பின்தங்கியே இருக்கிறோம். 

3. மின்சார வசதி: மின்சாரம் இல்லாமல் எந்தத் தொழிலையும் இனி செய்ய முடியாது. மின்சார வசதியில் நம் நாடு 29-வது இடத்தில் உள்ளது. 

4. சொத்துப் பதிவு: இது, எந்த ஒரு தொழிலுக்கும் மிகவும் அவசியமானது. இதிலும் நாம் பின்தங்கியிருக்கிறோம். 154-வது இடத்தில் இருக்கிறோம்.

5. கடன் வசதி: தொழில் செய்ய விரும்பும் எல்லோரிடமும் முதலீடு செய்ய பணம் இருக்குமா என்றால் இல்லை. எனவேதான் கடன் பெறும் வசதியும் தொழில் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான ஒன்றாக விளங்குகிறது. கடன் பெறுவதில் இந்தியா 29-வது இடத்தில் உள்ளது, பாராட்டப்படவேண்டிய விஷயம்.

6. சிறுபான்மை முதலீட்டாளர்களின் நலன்: ஒவ்வொரு தொழிலிலும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு அவசியமாகிறது. அவர்களுடைய பாதுகாப்பு உறுதியாக இருந்தால்தான் தொழில்களில் தொடர்ந்து ஆர்வம் காட்டுவார்கள். இதில் இந்தியா முன்னணியில், அதாவது 4-வது இடத்தில் உள்ளது.

7. வரி செலுத்துதல்: வரி செலுத்துதல் என்பது, ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கும் மக்களின் வளமான வாழ்க்கைக்கும் மிக அவசியமானது. இதில்தான் பல்வேறு முறைகேடுகளும் வரி ஏய்ப்புகளும் நடக்கின்றன. இதனால் பாதிக்கப்படுவது சாமான்ய மக்களும் மொத்தப் பொருளாதார வளர்ச்சியும்தான். வரி செலுத்தும் முறைகளில் தற்போதுதான் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது இந்தியா 119-வது இடத்தில் உள்ளது.

8. கடல் கடந்த வர்த்தகம்: கடல் கடந்த வர்த்தகத்தில் கடந்த ஆண்டைக்காட்டிலும் முன்னேறியுள்ள டாப் 10 நாடுகளில் 4-வது இடத்தில் உள்ளது. 

9. ஒப்பந்தங்களைச் செயல்படுத்துதல்: பல நாடுகளுக்கிடையிலும் சரி, பன்னாட்டு நிறுவனங்களுடனும் சரி, உள்நாட்டிலும் சரி அரசு பல்வேறு ஒப்பந்தங்களைப் போட்டுக்கொள்கிறது. ஒப்பந்தங்களைப் போடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அவற்றைச் செயல்படுத்துவதிலும் தீவிரம்காட்ட வேண்டும். அதில் இந்தியா 164-வது இடத்தில்தான் உள்ளது. 

10.திவால் பிரச்னைகளைத் தீர்த்தல்: திவால் பிரச்னை பெரும்பிரச்னை. நிறுவனங்கள் கடன் வாங்கிவிட்டு இஷ்டத்துக்கும் செலவுசெய்துவிட்டு திவாலாகும் நிலை அதிகரித்துவருகிறது. இதனால் வங்கித்துறை பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதைச் சரிசெய்ய, சமீபத்தில்தான் `திவால் சட்டம்' கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதைய திவால் பிரச்னைகளுக்குத்  தீர்வு காண்பதில், இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.

``மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பிறகு, பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த மாற்றங்களும் முன்னேற்றங்களும் நடந்துள்ளன. மொத்தம் 90-க்கும் மேலான சீர்திருத்தங்களை அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றில் பல நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் பலன்களும் இனிவரும் காலங்களில்தான் தெரியும்'' என்கிறார்கள் வல்லுநர்கள். மீதமுள்ள சீர்திருத்தங்களும் அடுத்தடுத்த நடைமுறைப்படுத்தப்படவிருக்கின்றன. எனவே, விரைவில் 100-லிருந்து 50-வது இடத்தை இந்தியா அடைய பிரகாசமான வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!