வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (02/11/2017)

கடைசி தொடர்பு:19:40 (02/11/2017)

மும்பையில் மம்தா பானர்ஜியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு!

மும்பையில் தங்கியிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்தார். அப்போது உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே உடனிருந்தார்.

மம்தா- உத்தவ்

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தெற்கு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருக்கிறார். அங்கு அவர் முக்கியத் தொழிலதிபர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் சந்தித்துப் பேசி வருகிறார். நாளை-வெள்ளிக்கிழமை- அவர் கொல்கத்தா திரும்ப உள்ளார்.

இந்நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது மகன் ஆதித்ய தாக்கரேவுடன் சென்று மம்தாவைச் சந்தித்துப் பேசினார். மத்திய அரசின் நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். பா.ஜ.க-வை சிவசேனாவும் விமர்சித்து வருகிறது. இந்தச் சூழலில் இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 

ஆனால், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று சிவசேனா விளக்கமளித்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் சிவசேனாவும், திரிணாமுல் காங்கிரஸும் ஓரணியில் இணைந்தது நினைவுகூரத்தக்கது.

- பிரதீப்