போதையில் ஊழியர், அத்துமீறிய பரிசோதகர்... பயணிகளை அவமதிக்கிறதா இந்திய ரயில்வே? | Is Indian railway respecting passengers?

வெளியிடப்பட்ட நேரம்: 20:22 (02/11/2017)

கடைசி தொடர்பு:15:18 (04/11/2017)

போதையில் ஊழியர், அத்துமீறிய பரிசோதகர்... பயணிகளை அவமதிக்கிறதா இந்திய ரயில்வே?

நேற்று இந்தியாவின் இரண்டு ரயில்வே பிரிவுகளில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்கள், அதன் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ரயில்வே துறை, நிர்வாக வசதிக்காக 17 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் வடக்கு ரயில்வே கிட்டத்தட்ட 7,000 கிலோ மீட்டர்களை இணைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக தெற்கு ரயில்வே உள்ளது. தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ராமேஸ்வரம் ரயில்நிலையம், முக்கியமான ரயில்நிலையங்களில் ஒன்று.  இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். இதனால் இந்த ரயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். இங்குதான் நேற்று (01/11/17) காலை அந்தச் சம்பவம் நடைபெற்றது.

ராமேஸ்வரத்திலிருந்து தினமும் காலை 5:30 மணிக்கு, பயணிகள் ரயில் மதுரைக்கு இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு வியாபாரிகள், மாணவர்கள், ஆன்மிகச் சுற்றுலா வந்துள்ள வடமாநிலத்தவர்கள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டவர்கள் சீட்டு வாங்க கவுன்ட்டர் முன்பு காத்திருந்தனர். ஆனால், ரயில் புறப்படும் வரை சீட்டு வழங்கும் ஊழியர் வரவில்லை. பயணிகள் உடனடியாகப் போராட்டத்தில் இறங்கினர். ரயில்வே போலீஸார் தலையிட்டு அனைவரையும் மதுரை வரை இலவசமாகப் பயணம் செய்ய அனுமதித்தனர். பிறகு  விசாரித்தபோதுதான் அன்று பயணச்சீட்டு வழங்கும் பணிக்கு வரவேண்டிய ரோகித்குமார் என்கிற ஊழியர், முழு போதையில் நினைவிழந்து கிடந்தது தெரியவந்தது. 

ரயில்வே

இந்தியா முழுவதும் உள்ள இந்துக்களின் மிக முக்கியப் புண்ணியத்தலமாக ராமேஸ்வரம் கருதப்படுகிறது.  காலையில் பயணச்சீட்டு வழங்க ஒரே ஓர் ஊழியரை நியமித்ததும், அவர் பணிக்கு வராததும் ரயில்வே துறையின் நிர்வாகத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதேபோல் நேற்று மும்பை உள்ளூர் ரயில்நிலையத்தில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் பயணிகளை இந்திய ரயில்வே  மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தாதர் ரயில்நிலையத்துக்கு வரும் ரயில் ஒன்றில் சாலிஸ்கான் என்ற ஊரிலிருந்து தீரஜ் என்பவர்  வந்துகொண்டிருந்தார். கல்யாண் ரயில்நிலையத்தில் தாம் வந்த ரயிலிருந்து இறங்கிய தீரஜ், அதைவிட விரைவாகச் செல்லும் உள்ளூர் ரயிலில் ஏறி தாதரை நோக்கிப் பயணித்துள்ளார்.  அவர் ஏறியது முதல் வகுப்பு ரயில்பெட்டி. பயணத்தின்போது வந்த பயணச்சீட்டு ஆய்வாளர் அஜித் பிரசாத், தீரஜ் முதல் வகுப்பில் பயணித்ததற்காக `ஃபைன்' போடுவதாகத் தெரிவித்துள்ளார். குறுக்கிட்ட தீரஜ், தாம் முதல்முறையாக இந்த ரயிலில் வருவதாகவும், முதல் வகுப்புக்கும் மற்ற வகுப்புக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்தது.

இந்நிலையில் ரயில், நிலையத்தை அடைந்துவிடவே, தீரஜின் சட்டைக் காலரைப் பற்றி தரதரவென தன் அலுவலகத்துக்கு இழுத்து வந்துள்ளார் அஜித் பிரசாத். அலுவலகத்துக்குள் வந்தவுடன் தீரஜை பிரசாத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். ரயில்வே அலுவலகத்திலிருந்து அலறல் சத்தம் கேட்கவே, பயணிகள் இருவர் உள்ளே புகுந்து தீரஜைக் காப்பாற்றியுள்ளனர். அவர்கள் சொன்ன அறிவுரைப்படி, நிலைய ரயில்வே போலீஸாரிடம் உடனே புகார் செய்துள்ளார் தீரஜ். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸார், அஜித் பிரசாத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

உரிய பயணச்சீட்டு வைத்திருந்தும் அபராதம் மட்டும் வசூலிக்கவேண்டிய நிலையில், ஒரு பயணி ரயில்வே ஊழியரால் தாக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில் ரயில்வே நிர்வாகம் பயணிகள் நலனை உதாசீனப்படுத்துகிறதா என்கிற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
     

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்