வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (03/11/2017)

கடைசி தொடர்பு:13:30 (03/11/2017)

'ராகுல் காந்தி எங்களை சோகத்திலிருந்து மீட்க வந்தவர்!' - நிர்பயாவின் தந்தை உருக்கம்

'ராகுல் காந்தி எங்கள் குடும்பத்தை சோகத்திலிருந்து மீட்க வந்தவர்' என நிர்பயாவின் தந்தை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி


கடந்த 2012-ம் ஆண்டு இந்தியத் தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிவீசப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. போராட்டங்கள் வெடித்தன. இதைத் தொடர்ந்து அப்போது மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நிர்பயாவின் குடும்பத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளும் உறுதுணையாக இருந்து வந்ததாக நிர்பயாவின் தந்தை பத்ரிநாத் சிங் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பத்ரிநாத் சிங், 'எங்கள் மகள் இறப்புக்குப் பின் எங்கள் குடும்பத்தை மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ராகுல் காந்தி தேற்றி வருகிறார். என் மகனுக்கு ஆலோசனைகள் வழங்கி பைலைட்டாக்கியுள்ளார். என் மகன் படித்து பைலட் ஆவதற்கு முழு காரணம் ராகுல் காந்திதான். எங்கள் குடும்பத்தைத் துயரில் இருந்து மீட்க வந்தவர் அவர். அவர் எங்கள் குடும்பத்துக்கு உதவி வருவதை மீடியாக்களில் சொல்லக் கூடாது எனச் சொல்லிவிட்டார். அதனால்தான் இத்தனை ஆண்டுகளாக வெளியே சொல்லவில்லை. இப்போது எங்கள் மகன் பைலட் ஆகிவிட்டான். அவனுக்கு நம்பிக்கையூட்டி படிக்க வைத்தது ராகுல் காந்தி தான். அவருக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம். அரசியல்ரீதியாக அவரைப் பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால், அவர் நல்ல மனிதர்' என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க