’ஆதாரை இணைக்கக் கோரி மக்களைப் பயமுறுத்த வேண்டாம்’ - உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைக்காவிட்டால் அவை செயல்படாமல் போகும் என்ற தகவலுடன் குறுஞ்செய்தி அனுப்பி மக்களைப் பயமுறுத்த வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. 


வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு எதிராகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதார் எண் இணைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பது குறித்த வழக்கை அரசியல் சாசன அமர்வு விசாரிக்க இருப்பதால், ஆதார் இணைப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார். அந்த விவகாரம் தொடர்பாக அரசியல் சாசன அமர்வே முடிவு செய்யும் என்றும் நீதிபதி கூறினார்.

அதேநேரம், ஆதாரை இணைக்காவிட்டால் உங்கள் கணக்குகள் மற்றும் மொபைல் எண் ஆகியவை செயல்படாமல் போகும் என்ற குறுஞ்செய்தியை அனுப்பி வாடிக்கையாளர்களைப் பயமுறுத்த வேண்டாம் என்று வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை அவர் கடிந்துகொண்டார். அப்போது குறுக்கிட்ட மத்திய அரசு தரப்பு, அதுபோன்ற குறுஞ்செய்திகள் எதுவும் அனுப்பப்படுவதில்லை என்று மறுத்தது. மத்திய அரசின் வாதத்தை மறுத்த நீதிபதி, ‘இங்கு கூடியிருக்கும் ஊடகத்தினர் முன்னிலையில் இந்தத் தகவலைக் கூற வேண்டாம் என்று நினைத்தேன். இருந்தாலும் கூறுகிறேன், அதுபோன்ற குறுஞ்செய்திகள் எனக்கு அனுப்பப்பட்டன’ என்று வேதனை தெரிவித்தார்.

ஆதார் எண் இணைப்புக்காக இறுதிக் கெடு நாள் குறித்த தகவலுடன் அந்தக் குறுஞ்செய்திகளை அனுப்புமாறு வங்கிகள் மற்றும் தகவல் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு அறிவுறுத்துமாறும் மத்திய அரசுக்கு அவர் உத்தரவிட்டார். ஆதார் அட்டை தொடர்பான பல்வேறு வழக்குகளை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நவம்பர் இறுதியில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண் இணைப்புக் கட்டாயம் என்ற உத்தரவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31-லிருந்து 2018 மார்ச் 31 வரை மத்திய அரசு சமீபத்தில் நீடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!