வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (03/11/2017)

கடைசி தொடர்பு:10:17 (04/11/2017)

நடிகை கடத்தல் வழக்கு! சி.பி.ஐ விசாரணை கோரும் நடிகர் திலீப்

பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள மலையாள நடிகர் திலீப், அந்த வழக்கில் சி.பி.ஐ விசாரணைக் கோரியுள்ளார்.

திலீப்

கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை திருச்சூர்-கொச்சி சாலையில் ஒரு கும்பல் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்தது. இதுகுறித்து அந்த நடிகை அளித்த புகாரின் பேரில், கடத்தலில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி பல்சர் சுனில் காவல்துறையினரிடம் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில் இந்தக் கடத்தலில் பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்தான் கடத்தலுக்குத் தூண்டினார் என்பது உறுதியானது.  

இதையடுத்து, திலீப் கைதுசெய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டார். 75 நாள் சிறைவாசத்துக்குப்பின் சமீபத்தில் அவர் ஜாமீனில் சிறையில் இருந்து வெளிவந்தார். இந்நிலையில், நடிகர் திலீப் கேரள மாநில உள்துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் திலீ்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தான் இந்த வழக்கில் சிக்க வைக்கப்பட கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா, கூடுதல் டி.ஜி.பி சந்தியா ஆகியோர் காரணமென்றும் திலீப் அந்த மனுவில் கூறியுள்ளார். 12 பக்கமுள்ள இந்தக் கடிதம் அக்டோபர் 10-ம் தேதி உள்துறைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

- பிரதீப்