வெளியிடப்பட்ட நேரம்: 14:15 (04/11/2017)

கடைசி தொடர்பு:14:15 (04/11/2017)

’ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிக்கிறது’: ஜிக்னேஷ் கருத்து

’ராகுல் காந்தியைச் சந்தித்தபோது எங்களது சமூகத்துக்காக அவர் அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாக உள்ளது’ என ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.

ஜிக்னேஷ்

ஒரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத்தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பி.ஜே.பி ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.

இதில், ஜிக்னேஷ் மேவானி என்ற 36 வயது வழக்கறிஞர், தலித் போராளியாக குஜராத்தில் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு ஜூலையில், உனா பகுதியில் நான்கு தலித்துகள் பொது இடத்தில் தாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்கள் மூலம் பிரபலமானவர். இவர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்திருந்தாலும் பா.ஜ.க-வை தோற்கடிப்பதுதான் தனது ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டுவருகிறார். இதற்காக எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று அறிவித்து வந்த ஜிக்னேஷ் நேற்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் ஜிக்னேஷ் மேவானி, “இதுபோல் காங்கிரஸ் கட்சியுடன் பல சந்திப்புகளைத் தேர்தலுக்கு முன்னர் நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். பா.ஜ.க-வை தோற்கடிப்பதுக்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். எங்கள் மக்களுக்காக ராகுல் அளித்த உறுதிமொழி திருப்தி அளிப்பதாகவே உள்ளது” எனக் கூறினார்.