”ஹதியாவுக்கு மயக்க மருந்து அளித்ததற்கான ஆதாரம் இருக்கிறது” கோபால் மேனன் #FreeHadiya

கேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கம் ஊரைச் சேர்ந்த அகிலா, 2015-ம் ஆண்டு சேலத்தின் ஒரு கல்லூரியில் சேர்ந்து இளங்கலை ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். விடுமுறை நாள்களில் தோழிகள் வீட்டிற்குச் சென்ற போது, இஸ்லாம் மதத்தின் மீது பற்று கொண்டு மதம் மாற விருப்பப்பட்டார் அகிலா. ஆனால், வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பவே வீட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து சேலத்தில் அவருடைய தோழிகள் வீட்டிலேயே தங்கி இஸ்லாம் மதத்தை முறையாகப் பயில வகுப்பில் சேர்ந்தார். இதனையடுத்து அவருடைய தந்தை அசோகன் ஆட்கொணர்வு மனுவை கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். விசாரணையில் விஷயம் தெரியவர, நீதிபதிகள் அந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.

அகிலாவுக்கு  'லவ் ஜிஹாத்' முறையில் திருமணம் நடக்கவிருப்பதாக சொல்லி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார் அவருடைய தந்தை. ஆனால் ஹதியாவுக்குத் திருமணம் முடிந்துவிட, ஹதியா இனி அவருடைய தந்தையுடன் செல்ல வேண்டும், அவர் எந்த வித தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த அனுமதி இல்லை என்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை எதிர்த்து ஹதியாவின் கணவர் ஷஃபின் ஜஹான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தேசியப் புலனாய்வு அமைப்பின் பதில்களைக் கேட்ட உச்சநீதிமன்றம், நவம்பர் 27 ஆம் தேதி ஹதியாவை உச்சநீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்படி உத்தரவிட்டிருக்கிறது.

ஹதியா - அகிலா

இதனிடையே ஹதியாவை உடனடியாக வீட்டுச் சிறையிலிருந்து விடுவிக்குமாறு பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதனிடைய ஹதியா 'தான் கொல்லப்படலாம்' என்று பேசிய வீடியோ ஒன்று வைரலாகியது. மேலும், கேரளாவைச் சேர்ந்த வலதுசாரி செயற்பாட்டாளர், ராஹூல் ஈஸ்வர் ஹதியாவின் வீட்டிற்குச் சென்று, 'ஹதியாவிற்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன' என்று யாருக்கும் தெரியாமல் விடியோ எடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தினார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

ராஹுல் ஈஸ்வர்

“ஹதியாவினுடைய வழக்கு ஒரு ‘லவ் ஜிஹாத்’ தாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் மதம் மாறிய பிறகு ஒரு வருடம் கழித்துதான் திருமணம் செய்துகொள்கிறார். எனவே, இது கட்டாயப்படுத்தப்பட்ட மதமாற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில்தான் வழக்கு செல்ல முடியும். ஹதியாவின் தந்தையை நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னுடைய வீட்டில் இது போன்றதொரு சம்பவம் நடைபெற்றிருந்தாலும், நானும் கூட அப்படி நடந்துகொண்டிருக்கலாம். ஆனால், அவருக்கு ஓர் இந்தியப் பிரஜையாகத் தரப்படவேண்டிய அடிப்படை உரிமைகள் தரப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு வலதுசாரி சித்தாந்தத்தை உடையவனாக இருந்தாலும், ஹதியா ஒரு மூன்றாம் இடத்தில், எந்தப் பக்கமும் சாராத ஓரிடத்தில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட வேண்டும். ஹதியாவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் என்னால் இதற்கு மேல் பதில் சொல்ல முடியாது. இது குறித்து ஹதியா என்ன சொல்கிறார் என்பதை பொறுதிருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் வலதுசாரி தத்துவவாதி ராஹுல் ஈஸ்வர்.

ஹதியாவின் வழக்கு குறித்து உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ள தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பானது இதனை ‘உளவியல் கடத்தல்’ என்றும், ஹதியாவின் கணவர்மீது ஏற்கெனவே இரண்டு வழக்குகள் இருக்கின்றன என்றும் இந்த வழக்கு குறித்து ஹதியாவிடம் கருத்து கேட்கத் தேவையில்லை என்றும் பதிலளித்தது. இதற்கு பதில் கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம், ‘குற்ற வழக்குகள்’ ஒருவர்மீது இருப்பதால், ஒரு பெண் அவரைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று ஏதேனும் சட்டம் சொல்கிறதா என்று கேட்டது. தற்போது ஹதியாவை வரும் 27 ஆம் தேதி ஆஜர்படுத்துமாறு உச்சநீதிமன்றம் கூறியிருக்கும் வேலையில், நான் ஹதியா (I am Hadiya) என்கிற ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் கோபால் மேனன். ஆவணப்படத்தைப் பார்க்க : 

 

 

கோபால் மேனன்

“ஹதியாவை முடிவெடுக்கத் தெரியாத அளவிற்கு முதிர்ச்சியில்லாத பெண்ணாகக் காட்டுவது பொய். இரண்டாவது ஆட்கொணர்வு மனுவை அவருடைய தந்தை பதிவு செய்த போது, ஹதியா உயர்நீதிமன்றத்திற்கே, ‘தன்னுடைய தந்தை ஒரு நாத்திகவாதி; தாய் ஒரு இந்து மதப் பற்றாளர் என்றாலும், தனக்கு இஸ்லாம் மதத்தின் மீது ஈர்ப்பு வந்து மதம் மாறி இருப்பதாகவும் மதம் மாறுவது தன்னுடைய சட்டபூர்வமான உரிமை என்றும் எழுதியிருந்தார். தன்னுடைய சட்டபூர்வமான உரிமையைக் கோரும் அளவிற்கு அவர் முதிர்வானவர்தான். ஹதியா மதம் மாற உதவிய அவருடைய தோழியின் தந்தை அபுபக்கரை கொல்ல, ஹதியாவின் தந்தை மற்றொரு இந்துத்துவவாதியுடன் இணைந்து செயல்படுவதாக ஹதியா அம்மாவே சொன்ன ஆடியோ க்ளிப் என்னிடமிருக்கிறது. மேலும், ஹதியா மயக்க மருந்து அளிக்கப்படுவதால், தற்போது அவரே சமைத்துச் சாப்பிடுகிறார் என்பதற்கான ஆதாரம் கூட என்னிடமிருக்கிறது. ஹதியா வழக்கில் கேரள உயர்நீதிமன்றம் பிரப்பித்த தீர்ப்பானது, சட்டத்திற்கு எதிரானது” என்கிறார் கோபால் மேனன்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஹதியாவின் தந்தையைத் தொடர்புகொண்ட போது அவர் எந்தக் கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும், வழக்கறிஞர் எண்ணையும் தர மறுத்துவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!