வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (06/11/2017)

கடைசி தொடர்பு:13:19 (06/11/2017)

2022-ல் வறுமையில்லா நாடு இந்தியா! சொல்கிறது நிதி ஆயோக் அறிக்கை

நிதி ஆயோக்

“வறுமை இல்லாத நாடாக 2022-ம் ஆண்டு இந்தியா உருவாகும்” என நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்,
இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”
என்றார் பாரதியார். அவர் சொல்லிப் பல ஆண்டுகளைக் கடந்துவிட்டது நம் நாடு. ஆனாலும், இன்னும் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லாமலும், அதைப் பற்றிக் கவலைப்படாமலும் புறப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய இந்தியா.
ஆட்சிக்கு வரும் ஒவ்வோர் அரசும் வறுமையைப் பற்றிப் பேசி, அதை ஒழிக்க எத்தனையோ திட்டங்களை அமல்படுத்தும். ஆனாலும், வறுமை மட்டும் இதுவரை ஒழிந்தபாடில்லை. இந்த நிலையில், “இந்தியாவில் 30 கோடி பேர், இன்னும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர். கல்வி, சுகாதாரம், குடிதண்ணீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதி இல்லாமல் உள்ளனர்” எனக் கடந்த 2015-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

‘ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு’! 

கடந்த 2000-ம் ஆண்டு, ஐ.நா. சபையில் நடைபெற்ற மாநாட்டில், ‘ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு’ என்ற எட்டு அம்ச சர்வதேச மேம்பாட்டுத் திட்டத்தில், ‘2015 டிசம்பருக்குள் உலக நாடுகளில் வறுமை மற்றும் பசிக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வி கிடைக்க வேண்டும். ஆண், பெண் பாகுபாடு அகற்றப்பட்டு, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது. இதில், ஐ.நா-வின் 189 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டன. 

இந்த நிலையில் ஐ.நா. சபை, “இந்தியாவின் மக்கள்தொகை, 125 கோடிக்கு மேல் உள்ளது. அதனால், வறுமை, பசி, எழுத்தறிவின்மை மற்றும் மோசமான சுகாதாரச் சூழ்நிலை போன்ற பிரச்னைகளில் இருந்து, லட்சக்கணக்கான மக்களை விடுவிப்பதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின், ‘ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கு’  என்ற திட்டத்தை, 2000-ம் ஆண்டில், இந்திய அரசு கடைப்பிடிக்கத்  தொடங்கியது. இந்தத் திட்டத்தின் கால அளவானது, 2015 டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனாலும் இந்தியாவில், 30 கோடி பேர் இன்னும் மோசமான வறுமை நிலையில் உள்ளனர்”  எனத் தெரிவித்திருந்தது.

வறுமையின் பிடியில் உள்ள மனிதர்கள்

“வறுமையை ஒழிப்பது சவாலான ஒன்று”!

இதுதொடர்பாக, ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் நிர்வாகச் செயலர் ஷாம்ஷத் அக்தர், “ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கை அமல்படுத்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. வறுமையில் வாடுவோர் எண்ணிக்கையைக் குறைப்பதில், கணிசமான வெற்றி கண்டுள்ளது. ஆனாலும், அந்த வெற்றி போதுமானதாக இல்லை. உலக மக்கள்தொகையில், ஆறில் ஒரு பங்கைக் கொண்டது இந்தியா. இந்தியாவால், ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்கில், முழுமையான வெற்றிகாண முடியவில்லை எனில், வேறு எந்த நாட்டாலும் முடியாது. அத்துடன், வரும் 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பது என மீண்டும் இலக்கு நிர்ணயித்தாலும், அதுவும் சவாலான ஒன்றாகவே அமையும்”  என்று அவர் தெரிவித்திருந்தார்.

பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா!

இந்த நிலையில், வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள அந்தப் பட்டியலில் இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து வட கொரியா, வங்கதேசம், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்தியா 97-வது இடத்தில் இருந்தது. 

வறுமையைக் குறிக்கும் படம்

சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினிப் பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியால் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில், இந்தியா 3-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தைவிட மிகவும் குறைவாகவே உள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நிதி ஆயோக் அறிக்கை!

இந்த நிலையில், “வறுமை இல்லாத நாடாக 2022-ம் ஆண்டு இந்தியா உருவாகும்” என நிதி ஆயோக் அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அரசுக்கு ஆலோசனை கூறும் உயர் அமைப்பான நிதி ஆயோக், கடந்த மாதம் நடைபெற்ற மாநில ஆளுநர்களின் மாநாட்டின்போது, இதுபற்றிய அறிக்கையை அளித்துள்ளது. ‘2022-ம் ஆண்டில் இந்தியா’ என்ற தலைப்பிடப்பட்ட அந்தத் தொலைநோக்கு அறிக்கையில், ‘உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா வளரும்; இந்தியாவில் நிலவும் வறுமை 2022-ம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழியும்; அதேபோல, 2022-ம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவாக மாறும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்கின் அறிக்கை வெறும் வார்த்தையோடு நின்றுவிடாமல், அதைப் பூர்த்திசெய்யும் விகிதத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஷாம்ஷத் அக்தர் சொன்னதுபோல், வறுமையை ஒழிக்க மீண்டும் இலக்கு நிர்ணயித்தாலும் அதுவும் சவாலான ஒன்றாகவே அமையும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்