ஜம்மு- காஷ்மீரில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.36.34 கோடி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்!

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் ரூ.36.34 கோடி மதிப்பிலான பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) பறிமுதல் செய்துள்ளது. 


ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாத இயக்கங்களுக்குப் பண உதவி செய்ததாக பிரிவினைவாத இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் பலரது வீடுகளிலும் என்.ஐ.ஏ. தொடர் சோதனை நடத்திவந்தது. அம்மாநிலத்தில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காகக் குறிப்பிட்ட சில அமைப்புகள் பண உதவி செய்துவந்ததாகவும் புகார் எழுந்தது. 
இந்தநிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.36,34,78,500 மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதீப் சௌகான், பக்வான் சிங், வினோத் ஷெட்டி, ஷாநவாஸ் மிர், தீபக் டோப்ரானி, மஜித் சோஃபி, இஜாவுல் ஹசன், ஜஸ்விந்தர் சிங் மற்றும் உமர் தார் உள்ளிட்ட 9 பேரைக் கைதுசெய்துள்ளதாக தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைப் பணமதிப்பிழப்பு செய்த அரசின் நடவடிக்கைக்குப் பின்னர், கிட்டத்தட்ட 86 சதவிகித ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அதனால், ஜம்மு- காஷ்மீர் மாநில தீவிரவாத செயல்களுக்கு எல்லைதாண்டி வரும் நிதியுதவி எந்தவிதத்திலும் நிறுத்தப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்தநிலையில், தீவிரவாதிகளுக்குப் பண உதவி செய்த விவகாரம் தொடர்பாக இவ்வளவு பெரிய தொகையை என்.ஐ.ஏ. பறிமுதல் செய்துள்ளது. அதேநேரம், ஜம்மு- காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கும், அம்மாநிலத் தொழிலதிபர்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது தொடர்பாக என்.ஐ.ஏ. எந்தத் தகவலையும் உடனடியாகத் தெரிவிக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!