வெளியிடப்பட்ட நேரம்: 19:08 (08/11/2017)

கடைசி தொடர்பு:19:37 (08/11/2017)

அடுத்த பணமதிப்பிழப்பு வந்தால் இவர்கள்தான் பொறுப்பு!

`பணமதிப்பிழப்பு நடவடிக்கை' அறிவிக்கப்பட்டு, இன்றோடு ஓராண்டு நிறைவடைந்தது. இதனால் ஏற்பட்ட நன்மைகள் குறித்து இதுவரை அரசு சார்பில் பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதால், மத்திய அரசு மௌனமாக இருக்கிறது. இந்த மௌனத்தைக் கலைக்கவும், இனிவரும் காலத்தில் பொருளாதார மாற்றங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை வழங்கவும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுவை அமைத்திருக்கிறது மத்திய அரசு.

பணமதிப்பிழப்பு பிரதமர் மோடி

500, 1,000 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் விமர்சித்துவரும் வேளையில், இவர்களின் நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் குழு, 2017-18ம் நிதியாண்டின் செயல்பாடுகள் குறித்து மதிப்பீடு செய்து பிரதமருக்கு அறிக்கை வழங்கும். இந்தக் குழுவின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக, நிதி ஆயோக் குழுவின் உறுப்பினர் பிபெக் டெப்ராய், குழுவின் செயலாளராக நிதி ஆயோக் குழுவின் முதன்மை ஆலோசகர் ரத்தன் வட்டேல் நியமிக்கப்பட்டுள்ளனர். குழுவின் மற்ற உறுப்பினர்களாக சுர்ஜித் பல்லா, ரதின்ராய், அஷீமா கோயல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு, தன்னிச்சையாக அதிகாரம்கொண்ட அமைப்பாகச் செயல்பட்டு, பிரதமருக்கும் நிதி அமைச்சகத்துக்கும் ஆலோசனை வழங்கும். 

ஐவர் குழுவில் இடம்பிடித்தவர்களின் பின்னணியை ஆராய்ந்தபோது, இவர்கள் ஏற்கெனவே அரசின் பல்வேறு குழுக்களில் இடம்பெற்றிருந்தவர்கள் எனத் தெரியவந்தது.

பணமதிப்பிழப்புபிபெக் டெப்ராய்: 1993 - 1998-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் குறித்த ஐ.நா சபையின் ஆய்வில் ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். 2015-ம் ஆண்டில் இந்திய ரயில்வே மறுசீரமைப்புக் குழுவின் தலைவராக இருந்தார்.  தனி ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்வதை விடுவித்து, அதையும் பொது பட்ஜெட்டுக்குள் கொண்டுவந்ததில் முக்கியப் பங்காற்றியவர். அரசுப் பணியைத் தவிர, மகாபாரதத்தையும், பகவத் கீதையும் மொழிபெயர்ப்பதை முக்கியப் பணியாக வைத்திருக்கிறார்.

பணமதிப்பிழப்புசுர்ஜித் பல்லா: பொருளாதாரக் கொள்கை குறித்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறார். தினசரி செய்தித்தாள்களில் கட்டுரைகள் எழுதியும், டிவி விவாதங்களில் கலந்துகொண்டும் அரசின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இவர், பல்வேறு நிறுவனங்களுக்குப் பொருளாதார ஆராய்ச்சி, சொத்து மேலாண்மை மற்றும் வளர்ந்துவரும் சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை வழங்கிவருகிறார். மேலும், ரிசர்வ் வங்கியின் மூலதனக் கணக்கு மாற்றத்துக்கான குழு, பங்குச்சந்தை அமைப்பின் இரண்டாம் நிலை சந்தை குறித்த ஆலோசனைக் குழு, தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.

இவரது விமர்சனங்களைத் தணிக்கும் வகையில் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இவருக்கு இடமளித்திருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

பொருளாதார ஆலோசனை குழு பண மதிப்பு நீக்கம்ரதின் ராய்: கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், டெல்லியில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பப்ளிக் ஃபைனான்ஸ் அண்ட் பாலிசி அமைப்பின் இயக்குநர். ஐ.நா சபையின் வளர்ச்சி சார்ந்த திட்டங்களில் ஆலோசகராகவும், வங்கி முதலீடு, பொருளாதாரக் கல்வி மற்றும் ஆராய்ச்சி, பொதுவுடைமையாக்கம் போன்ற திட்டங்களிலும் பணியாற்றியுள்ளார். ஏழாவது ஊதியக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்கிறார். 

பொருளாதார ஆலோசனை குழுஅஷீமா கோயல்: யேல் பல்கலைக்கழகத்தில் கெளரவ வருகைப் பேராசிரியையாகவும், இந்திரா காந்தி வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியையாகவும் பணிபுரிகிறார். மத்திய அரசின் பல்வேறு குழுக்களிலும், ரிசர்வ் வங்கியின் பொருளாதாரக் கொள்கைக்கான தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, நிதி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆலோசனைக் குழு போன்றவற்றிலும் உறுப்பினராகப் பதவி வகித்திருக்கிறார். 

ரத்தன் வட்டேல்: நிதி ஆயோக் குழுவின் முதன்மை ஆலோசகரான இவர், பிரதமரின் அலுவலகத்தில் சர்வதேச நாணய நிதியம் குறித்து ஆலோசகராகப் பணியாற்றியவர். முன்னதாக மத்திய அரசின் நிதிச் செயலாளராகப் பணியாற்றியபோது, விவேகமான நிதி நிர்வாகத்தின் மூலம் பணப்பற்றாக்குறையைச் சிறப்பாகக் கையாண்ட அனுபவமுடையவர். 

பொருளாதார ஆலோசனை குழு

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, டிஜிட்டல் பரிவர்த்தனையை எளிமைப்படுத்தும் மதிப்பிடல் குழுவின் தலைவராக இருந்திருக்கிறார். இவரது குழுவின் ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மத்திய அரசு அமல்படுத்திவருகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் ஜி.எஸ்.டி-க்கும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ``இனி, பொருளாதாரம் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கைக்கு இந்தக் குழுவே முழுப் பொறுப்பு" என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.


டிரெண்டிங் @ விகடன்