இமாசலப்பிரதேசம் தேர்தலில் யாருக்கு வெற்றி?  | Himachal Pradesh Election-Small Report

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (08/11/2017)

கடைசி தொடர்பு:09:04 (10/11/2017)

இமாசலப்பிரதேசம் தேர்தலில் யாருக்கு வெற்றி? 

இமாச லப்பிரதேச சட்டப்பேரவைக்கு நாளை - நவம்பர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சிறிய மாநிலங்களில் ஒன்று இமாசலப்பிரதேசம். ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய இந்திய மாநிலங்களும், கிழக்குப் பகுதியில் திபெத்தும் இம்மாநிலத்தைச் சுற்றி எல்லைகளாக அமைந்துள்ளன. இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். இந்தி, பஹாரி ஆகிய மொழிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்திக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் இரண்டாவது ஆட்சி மொழியாக உள்ளது. விவசாயம், சுற்றுலா ஆகியவை இம்மாநிலத்துக்குப் பொருளாதார பலம் சேர்ப்பவையாக விளங்குகின்றன. 

இமாச்சலப்பிரதேச தேர்தல்


தற்போது இமாசலில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக வீரபத்ர சிங் பதவி வகிக்கிறார். பொதுவாக காங்கிரஸின் கோட்டையாகத் திகழும் இமாசலப்பிரதேசத்தில் 1985-ம் ஆண்டுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.க-வும் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. இந்தத் தேர்தலில் 83 வயதான வீரபத்ர சிங்கையே முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ். பா.ஜ.க சார்பில் பிரேம் குமார் துமல் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். இமாசலப்பிரதேசத்தில் மொத்த சட்டப்பேரவைத் தொகுதிகள் 68 ஆகும். அதில் 35 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க முடியும். பா.ஜ.க சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஆகியோர் பிரசாரம் செய்திருக்கிறார்கள். 
இமாசலப்பிரதேச தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்: 


1.காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் வீரபத்ரசிங் மீது ரூ.10 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதை பா.ஜ.க தனக்கு சாதகமாகப் பயன்படுத்த நினைக்கிறது. மற்றொரு புறம் பா.ஜ.க சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இதைக் குறிப்பிட்டு தீவிர பிரசாரம் செய்தது காங்கிரஸ். 
2. இமாசலப்பிரதேச அரசின் கடன் சுமை அதிகரித்துவருகிறது. தலைமை தணிக்கைக்குழு இயக்குநர் (சி.ஏ.ஜி) அறிக்கையின்படி, 2011-12-ம் ஆண்டில் ரூ.19,511 கோடியாக இருந்த கடன் ரூ.27,910 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 62 சதவிகிதக் கடனை 7 மாதத்துக்குள் இமாச்சலப்பிரதேச அரசு திருப்பிச் செலுத்த வேண்டும். கடன் பிரச்னை தேர்தலில் எதிரொலிக்கும். 
3. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள்குறித்து இமாசலப்பிரதேச மக்களிடையே விவாதங்கள் எழுந்துள்ளன. இது பா.ஜ.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 
4. இமாசலப்பிரதேசத்தில் பெண்கள் ஓட்டு அதிகம் உள்ளது. ஆக, பெண்களைக் கவரும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம். இந்தத் தேர்தலில் 19  பெண்கள் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க சார்பில் 6 பெண்களும் காங்கிரஸ் தரப்பில் இருந்து 3 பெண்களும் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். 
5. ராஜபுத்திர சமூகத்தினருக்கு 38 சதவிகித வாக்கு வங்கி உள்ளது. இந்த வாக்குகளை அறுவடை செய்யும் நோக்கத்தில் அங்கு அதே மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவை பிரசாரக் களத்தில் இறக்கியது பா.ஜ.க.

மொத்தம் 338 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 180 பேர் சுயேச்சைகள். இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி சார்பில் 16 பேர் போட்டியிடுகின்றனர். களத்தில் பிரதான போட்டியே பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில்தான். 'கை' ஓங்குமா... இல்லை 'தாமரை' மலருமா... என்பது வாக்கு எண்ணிக்கை தினமான டிசம்பர் 18-ம் தேதி தெரிந்துவிடும்.!