வெளியிடப்பட்ட நேரம்: 23:38 (08/11/2017)

கடைசி தொடர்பு:08:02 (09/11/2017)

'Unbeatable service..!' வைரலாகும் ஏர் இந்தியா விளம்பரம்..!

விமானப் பயணி தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

சென்னையிலிருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் ஏறுவதற்காக விமான நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில் ஏற முயற்சிக்கும் ராஜீவ் கட்டியால் என்ற பயணியிடம் விமான நிறுவன ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர், அவரை இழுத்துப் போட்டு கீழே தள்ளிவிட்டு தாக்குகின்றனர். டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது.

இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டதோடு, தாக்குதலில் ஈடுபட்ட ஊழியரை பணி நீக்கம் செய்ததாகவும் அறிவித்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான நிறுவனம், அதனுடைய ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், Unbeatable service என்று மேற்கூறிய சம்பவத்தைக் குறிக்கும் விதமாக வெளியிட்டுள்ளனர். அதேப்போல, ஜெட் ஏர்வேஸ் லோகோவுடன் 'We beat our competition, not you'  என்று சமூக வலைதளங்களில் படம் ஒன்று வைரலானது. இதற்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியது. இதுகுறித்து தெரிவித்த ஜெட் ஏர்வேஸ், 'ஜெட் ஏர்வேஸ் தொடர்பாக பரவும் அந்தப் படம் எங்களுடையது அல்ல' என்று விளக்கமளித்துள்ளது.