சோலார் பேனல் விசாரணை அறிக்கை: உம்மன் சாண்டி மீது குற்றச்சாட்டு

கேரள மாநிலத்தையே உலுக்கிய சோலார் பேனல் விவகாரம்குறித்த விசாரணை அறிக்கை, இன்று கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயனால் தாக்கல்செய்யப்பட்டது.

உம்மன் சாண்டி

கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளில், சோலார் பேனல் பதித்துத்தருவதாகக் கூறி, மக்களிடம் பல கோடிகள் வசூலித்ததாக பிஜு ராதாகிருஷ்ணன் மற்றும் சரிதா நாயர் ஆகியோர்மீது புகார் எழுந்தது. இதில், கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மற்றும் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் ஆர்யாடன் ஆகியோருக்கு கோடிகளில் லஞ்சம் கொடுத்ததாக, சரிதா நாயர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கு தொடர்பாக, கேரள உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி ஜி.சிவராஜன் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைத்து, கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி, அன்றைய முதலமைச்சர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட சரிதா நாயர், 9 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால், மனைவியைக் கொலைசெய்த வழக்கு தொடர்பாக, பிஜு ராதாகிருஷ்ணன் சிறைவாசம் அனுபவித்துவருகிறார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில், உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணமாக இந்த ஊழல் வழக்கு கருதப்பட்டது. இதுதவிர, காங்கிரஸ் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பலருக்கும் இந்த ஊழல் வழக்கில் தொடர்பிருப்பதாகக் கூறப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற மோசடி வழக்கு விசாரணை அறிக்கையை நீதிபதி சிவராஜன், முதலமைச்சர் பினராயி விஜயனிடம் கடந்த மாதம் நேரில் சமர்ப்பித்தார்.  அந்த அறிக்கையை இன்று காலை கேரள சட்டமன்றத்தில் முதல்வர் பினராயி விஜயன் தாக்கல்செய்தார். அதில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கூறினார். இந்தக் குற்ற ஆவணத்தில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மீது பல குற்றச்சாட்டுகள் பதிவாகியிருந்தது வெளியாகியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!