வெளியிடப்பட்ட நேரம்: 16:55 (09/11/2017)

கடைசி தொடர்பு:17:09 (09/11/2017)

அதிகரிக்கும் காற்று மாசு! டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்குத் தடை

காற்று மாசு அதிகரித்ததைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் நவம்பர் 14-ம் தேதி வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. 


தலைநகர் டெல்லி, கடுமையான காற்று மாசுபாட்டால் திண்டாடுகிறது. வெளியே செல்ல முடியாத அளவுக்கு புழுதிப்படலம் படர்ந்துள்ளதால், நவம்பர் 12-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், டெல்லியில் 14-ம் தேதி வரை கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. சிமென்ட், மணல் போன்ற கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள், டெல்லிக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

'டெல்லியில் உள்ள சாலைகளை இரவு 10 மணிக்குப் பிறகு நீர் தெளித்துச் சுத்தம் செய்ய வேண்டும்' என்று டெல்லி மாநில அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமைத் தீர்ப்பாயம் பரிந்துரை வழங்கியுள்ளது. டெல்லியின் அண்டை மாநிலங்களான பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், விவசாயிகள் அறுவடைக்குப்பின் மிஞ்சிய பயிர் எச்சங்களை எரிக்காமல் இருப்பதை அம்மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும் என்றும் பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது. காற்று மாசு சம்பந்தமான வழக்கு ஒன்றை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தலைவர் ஸ்வதந்தர் குமார், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.