’இந்தியாவுக்கு பைபை சொல்லவில்லை’: ஏர்செல் விளக்கம்
நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவில் உள்ள ஏர்செல் நிறுவனங்களை மூடவிருப்பதாக நாடு முழுவதும் நேற்று தகவல் பரவியதை அடுத்து நேற்று மாலையிலிருந்து ஏர்செல் நிறுவனம் அதற்கு மறுப்புத் தெரிவித்து வாடிக்கையாளர்களுக்குக் குறுந்தகவல்கள் அனுப்பி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய நுகர்வுச் சந்தையாகத் தற்போது தொலைதொடர்புத் துறை வளர்ந்து வருகிறது. இந்தத் துறையைப் பிடிப்பதில் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய நிறுவனங்களெல்லாம் போட்டிபோட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இதே துறையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது நிறுவனக் கிளைகளை மூட முடிவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெரும் கடன் சுமையிலிருந்து வெளியே வரவும், தொழிலைக் காப்பாற்றிக்கொள்ளவும் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான ஏர்செல் நிறுவனத்துடன் இணைவதற்கு முடிவுசெய்தது. ஆனால், சட்டம் மற்றும் ஒழுங்குமுறை ரீதியிலான நிச்சயமற்றதன்மை, இந்த இரு நிறுவனங்களின் முதலீடுகளில் இருக்கும் சிக்கல் ஆகியவை காரணமாகவும் ஏர்செல் நிறுவனம் இந்த இணைப்புக்கெதிரான நிலைப்பாட்டை எடுத்ததாலும் ஒப்பந்தம் ரத்தானது.
இந்நிலையில், இரண்டு நிறுவனங்களும் நிதி நெருக்கடியால் தவித்து வருகின்றன. இதனால் இந்தியாவில் இருந்தே வெளியேறிவிடலாம் என்ற முடிவில் ஏர்செல் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், வெளியாகும் தகவல்களைக் கண்டு அதற்கு நேற்று மாலையிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு ஏர்செல் குறுந்தகவல்கள் மூலம் விளக்கமளித்து வருகிறது. அந்தக் குறுந்தகவலில், “ஏர்செல் தமிழகத்தில் இருக்கும். மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தங்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.