திடீர் உச்சம் பெற்ற இந்தியப் பங்குச்சந்தை
கடந்த ஒரு வாரமாக வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று திடீர் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தாலும் வீழ்ந்துகிடந்த இந்தியப் பங்குச்சந்தை இன்று உச்சத்தில் நிறைவடைந்துள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 32.12 புள்ளிகள் உயர்ந்து 33,250 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 5.80 புள்ளிகள் உயர்ந்து 10,308 புள்ளிகளாக உள்ளது.
இந்தியப் பங்குச்சந்தை வீழ்ந்தாலும், தொடர்ந்து 32,000 புள்ளிகள் அருகிலேயே நிலைத்திருப்பது வணிகர்களை மகிழ்ச்சியிலேயே வைத்துள்ளது. இன்றைய நிலவரப்படி, ஐ.டி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை நிறுவனப் பங்குகள் உச்சத்தில் உள்ளன. கச்சா எண்ணெய் விலையேற்றம், சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியபோதும், இந்தியப் பொருளாதாரத்தில் அதனால் பெரும் வளர்ச்சி ஏதும் ஏற்படவில்லை. இந்தியா, எண்ணெய் வளங்களைப் பொறுத்த வரை அதிகமாக இறக்குமதியையே நம்பி இருப்பதால், கச்சா எண்னெய் விலை ஏற்றம் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.