ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீ ஓடிய ரயில் என்ஜினை டூவிலரில் துரத்திப் பிடித்த ரயில்வே ஊழியர்கள்!

ரயில் எஞ்சின் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் 13 கி.மீ. தூரம் பயணித்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 

சென்னையிலிருந்து, மும்பை செல்லும் ரயில்களின் எலெக்ட்ரிக் என்ஜின்கள், கர்நாடகா மாநிலம் வாடி (Wadi) ரயில் நிலையத்தில் டீசல் என்ஜினுக்கு மாற்றப்படுவது வழக்கம். வாடியிலிருந்து மகாராஷ்ட்ரா மாநிலம் சோலாப்பூர் ரயில் நிலையம் வரை ரயில்பாதை மின்மயமாக்கப்படவில்லை என்பதால் என்ஜின்கள் மாற்றப்படுகின்றன. அதன்படி, சென்னையிலிருந்து மும்பை சென்ற ரயிலின் மின்சார என்ஜின், வாடி ரயில் நிலையத்தில் தனியாகக் கழற்றப்பட்டது. ரயிலில் டீசல் என்ஜின் இணைக்கப்பட்டுக்கொண்டிருந்த போதே, மின்சாரத்தில் இயங்கும் என்ஜின் ஓட்டுநர் இல்லாமல் தனியாக ஓடத் தொடங்கியது.

இதையடுத்து, அந்த என்ஜினை, இருசக்கர வாகனத்தில் ரயில்வே ஊழியர்கள் துரத்தத் தொடங்கினர். கிட்டத்தட்ட 13 கி.மீ. தூரம் அந்த என்ஜினை அவர்கள் விரட்டிச் சென்றனர். நல்வார் என்ற இடத்துக்கு அருகில் ரயில் என்ஜினில் ஏறிய ஊழியர், பிரேக் அடித்து என்ஜினை நிறுத்தினார். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் வேறு ரயில்கள் எதுவும் அந்தப் பாதையில் வராததால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. ஓட்டுநர் இல்லாமல் ரயில் என்ஜின் சென்ற விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ரயில்வேத் துறை உத்தரவிட்டுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!