Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்வைத் தள்ளிவைப்பதற்காகக் கொலை... ப்ளஸ் ஒன் மாணவன் வெறிச்செயல்!

டெல்லி அருகே குருகிராமில் உள்ள ரேயான் சர்வதேசப் பள்ளியில் படித்த, 2-ம் வகுப்பு மாணவன் ப்ரதியூமான் செப்டம்பர் 8-ம் தேதி கொலைசெய்யப்பட்டான். பள்ளிக் கழிவறை அருகே கழுத்தறுபட்ட நிலையில் சிறுவனின் உயிரற்ற சடலம் கிடந்தது. முதலில் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களில் யாராவது சிறுவனைக் கொலைசெய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது. இரு ஓட்டுநர்கள், பள்ளி ஊழியர்கள் இருவர், மனிதவளத் துறை அலுவலர்கள் என ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். இருந்தாலும், இந்தச் சம்பவத்தில் உண்மையான குற்றவாளி யார், நடந்தது என்னவெனத் தெரியாமல் ஹரியானா போலீஸ் திணறினர். 

தேர்வு பயம் காரணமாக சிறுவன் கொலை

Pic Courtesy : Hindusthan Times 

இதனால் ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார், சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைத்தார். சி.பி.ஐ விசாரணையில் அதே பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவன், ப்ரதியூமானைக் கொலை செய்திருப்பது தெரியவந்தது. 

``தேர்வு பயம், கொலையில் ஈடுபட்ட 11-ம் வகுப்பு மாணவனுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. சிறுவனைக் கொலைசெய்தால் பள்ளிக்கு விடுமுறை விடப்படும், தேர்வு நடைபெறாது, பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பும் ஒத்திவைக்கப்படும் என்ற காரணங்களுக்காக, சிறுவனை, சீனியர் மாணவர் கொலைசெய்திருக்கிறார். இரண்டு முதல் நான்கு நிமிடத்துக்குள் சிறுவனை அந்த மாணவன் உயிரிழக்கச் செய்துள்ளான்'' என்றனர் சி.பி.ஐ அதிகாரிகள்.

சீனியர் மாணவரை காவலில் எடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர். 16 வயதான அந்த மாணவர், சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சீனியர் மாணவரின் தரப்பு வழக்குரைஞர், “இந்த மாணவரை, வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்கவைத்துள்ளனர்'' எனக் குற்றம்சாட்டுகிறார்.

சிறுவன் கொலைசெய்யப்பட்ட தினத்தன்று தகவல் பரவி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட, நடந்துகொண்டிருந்த தேர்வு ரத்துசெய்யப்பட்டது. கொலையில்  ஈடுபட்டதாகச் சொல்லப்படும் மாணவனும் தேர்வு அறையில்தான் இருந்துள்ளார். தேர்வு ரத்துசெய்யப்பட்டதையடுத்து,  அங்கிருந்து அவர் வெளியேறியிருக்கிறார். பள்ளிக் கழிவறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காட்சிகளைக்கொண்டு, கொலை செய்த மாணவனை சி.பி.ஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொலை செய்த மாணவனுக்கு, தேர்வை நிறுத்துவது மட்டும்தான் நோக்கமாக இருந்துள்ளது. எதையாவது செய்து தேர்வைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கருதியிருக்கிறான். அந்தச் சமயத்தில் கழிவறைக்கு வந்த சிறுவனின் கழுத்தைக் கத்தியால் அறுக்க, அதிக ரத்தம் வெளியேறி சிறுவன் உயிரிழந்துள்ளான்.

கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை கூறுகையில், “அற்பமான காரணத்துக்காக என் மகனை இழந்துள்ளேன். குற்றவாளியைச் சிறாராகக் கருதக் கூடாது. கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். என் மகனை கொலை செய்துவிட்டுத் தப்பிச் செல்லக்கூடிய அளவுக்கு மனநிலை கொண்டவரை, எப்படிச் சிறார் குற்றவாளியாகக் கருத முடியும்?'' என்று வேதனையுடன் கேள்வி எழுப்புகிறார். 

பள்ளியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக போலீஸார் குற்றம்சாட்டியுள்ள நிலையில், ரேயான் பள்ளி நிறுவனர் அகஸ்டின் பின்டோ, மேலாண் இயக்குநர் கிரேஸி பின்டோ, தலைமைச் செயல் அதிகாரி ரேயான் பின்டோ ஆகியோர் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுசெய்தனர். மும்பை நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடிசெய்தது. தொடர்ந்து, பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்றத்தில் மூவரும் முன்ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளனர். 

இதுகுறித்து, மனோதத்துவ நிபுணர் அசோகனிடம் பேசியபோது,

``தற்போதுள்ள காலகட்டத்தில் 11-ம் வகுப்பு மாணவர்கள்கூட வளர்ச்சி பெற்றவர்களுக்குள்ளான குணாதிசயங்களுடன் உள்ளனர். இணையத்தில் அத்தனை விஷயங்களும் கொட்டிக்கிடக்கின்றன. கழுத்தை அறுப்பது போன்ற புகைப்படங்களை இணையத்தில் பார்த்து, அதேபோல செய்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்துக்கு தேர்வு மட்டுமே காரணம் எனக் கருதிவிட முடியாது. தேர்வைக் காரணம்காட்டி, அதன் பின்னால் பல விஷயங்கள் இருக்கக்கூடும். பயமுறுத்துவது, நன்றாகப் படிக்கவில்லை என சகமாணவர்களிடமிருந்து ஒதுங்கியிருப்பது, தாழ்வுமனப்பான்மை காரணமாக என்ன செய்வது எனத் தெரியாத நிலை... போன்ற பல காரணங்களால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இன்னொரு விஷயத்தையும் கருத்தில்கொள்ள வேண்டும். வயதை எட்டியவர்களைவிட சிறுவர்கள் இன்னும் மூர்க்கத்தனமாக இருக்கிறார்கள் என்பதை நிர்பயா விஷயத்திலிருந்து நாம் அறிந்துகொள்ளவேண்டியது இருக்கிறது'' என்றார். 

அற்பமான காரணத்துக்காக சிறுவன் கொலையான சம்பவம், டெல்லி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close