’இந்தியர்களை ஒன்றிணைக்க மோடி பாடுபட்டுவருகிறார்!’ - ட்ரம்ப்பின் திடீர் பாராட்டு

உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான இந்தியாவில் உள்ள மக்களை ஒன்றிணைக்க, பிரதமர் மோடி பாடுபட்டுவருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டியுள்ளார். 


ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு, வியட்நாமில் நடைபெற்றுவருகிறது. அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், பல்வேறு நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘சமீபத்தில், இந்தியா தனது 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது.  100 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகைகொண்ட இந்தியா, உலகின் மிகப்பெரிய குடியரசு நாடு. பொருளாதாரரீதியில் இந்தியா சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளதுடன், அதிகரித்துவரும் நடுத்தர மக்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. மிகப்பெரிய நாட்டையும் அதன் மக்களையும் ஒன்றிணைக்க, பிரதமர் மோடி அரும்பாடுபட்டுவருகிறார். அதில், மோடி வெற்றியும் பெற்றுள்ளார்’ என்று பாராட்டிப் பேசினார். 

சீனாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியட்நாம் வந்துள்ள ட்ரம்ப், மோடியைப் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவை மூக்குடைக்கும் நோக்கில் சர்வதேச கவனம் பெற்ற ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் மோடியை ட்ரம்ப் பாராட்டிப் பேசியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!