Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று குழந்தைகளுக்குப் பின் 34 வயது மேரி கோம் ஐந்தாவது முறை ஆசிய சாம்பியன் ஆன கதை!

ரியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெறவில்லை. பரவாயில்லை, 34 வயது. மூன்று குழந்தைகள். நிறைவான குடும்பம். போதாக்குறைக்கு ராஜ்யசபா எம்.பி மற்றும் ஒலிம்பிக் கமிட்டி பதவிகள். இதோடு, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் என்ற முறையில் அவ்வப்போது விழாக்களில் சிறப்பு விருந்தனராக ஜம்மென வந்து போயிருக்கலாம். இதிலெல்லாம் மேரி கோமுக்கு திருப்தியில்லை. ஆடுன காலும் பாடுன வாயும் சும்மா இருக்குமா? பாக்ஸிங்தான் அவர் உயிர். காயம் குணமடைந்ததும் மீண்டும் தனக்கு சாதகமான 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்றார். அதற்கேற்ப உடம்பைத் தேற்றினார். களம் குதித்தார். தன்னையே மீட்டெடுத்தார். இதோ மகளிருக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் சாம்பியன். இந்தப் பட்டத்தை அவர் வெல்வது ஐந்தாவது முறை. மீண்டும் ஊடகங்களில் மேரி கோம் பேட்டிகள். எல்லாவற்றையும் சமாளித்து மேரி கோம் மீண்டு வந்தது எப்படி?  

மேரி கோம்

வியட்நாம் தலைநகர் ஹோசிமின் நகரில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில் ஐந்தாவது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்த மேரி கோமுக்கு, வெற்றியைக் கொண்டாடக்கூட நேரமில்லை. வடகொரியாவின் கிம் யாங்கை வீழ்த்திய கையோடு, சுவிட்சர்லாந்துக்குப் பறந்தார். அங்கே, ஒலிம்பிக் கமிட்டிக் கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் அவர் பங்கேற்கவேண்டியது இருந்தது. ஹோசிமினிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு விமானம் பிடிக்கும் முன் டெல்லிக்கு ஒரு போன் அடிக்கிறார். டெல்லியில் படித்துவரும் தன் குழந்தைகளிடம் `காற்று மாசு கவனம்' என்று எச்சரிக்கிறார். 

மேரி கோமுக்கு மூன்று குழந்தைகள். எம்.பி-யான பிறகு, அவர் ரொம்பவே பிஸி. மாதத்தில் பாதி நாள்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தில்தான் இருப்பார். குழந்தைகளை நேரில் பார்ப்பதே அரிது. சொல்லப்போனால் மேரி கோம் வீட்டில், கணவர் ஆன்லர் கோம்தான் குடும்பத்தலைவி மாதிரி. குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதிலிருந்து வீட்டுவேலைகள் வரை அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கிறார். “என் வீட்டில் கணவர்தான் வீட்டுவேலைகளைச் செய்து, என் குழந்தைகளையும் பார்த்துக்கொள்கிறார். ஆனால், அவர் இல்லாமல் நான் இல்லை'' என்று ஏற்கெனவே மேரி கோம் சொல்லியிருக்கிறார்.

குடும்பத்தலைவியாக மட்டுமல்ல, ஒரு எம்.பி-யாகவும் மேரி கோம் முத்திரை பதித்துள்ளார். `விளையாட்டுத் துறையைச் சேர்ந்தவர்களை ராஜ்ய சபா எம்.பி-யாக்கினால் நாடாளுமன்றத்துக்கு வருவதே இல்லை' என்ற குற்றச்சாட்டு எப்போதுமே உண்டு. மேரி கோம் இதற்கு விதிவிலக்கு. தனக்கு கொடுக்கப்பட்ட எம்.பி பதவியின்  மாண்பையும் மதிப்பையும் உணர்ந்து, மக்கள் நலனுக்காகவும் உழைக்கிறார். ராஜ்ய சபா நியமன எம்.பி-க்களில் நாடாளுமன்ற  அட்டெண்டன்ஸ் விஷயத்தில் இவருக்குத்தான் முதல் இடம். மற்ற எம்.பி-க்கள் மேரி கோமிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் அநேகம். 

Mary Kom

PC -  MC Mary Kom official FB photo

ஒரு எம்.பி-யாக இருந்துகொண்டு எப்படி சாதிக்க முடிகிறது என்றால், “நாடாளுமன்றத்தில் மதியம் வரை இருப்பேன். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு பயிற்சிக்கு ஓடுவேன். இந்த வாழ்க்கையும் பிடித்திருக்கிறது'' என்கிறார். 

வியாட்நாமில் மேரி கோமுக்குக் கிடைத்த வெற்றி அசாதாரணமானது. இறுதிச்சுற்றில் அவருடன் மோதிய கிம் யாங், இளம் வீராங்கனை மட்டுமல்ல, மேரி கோமைவிட உயரமும் அதிகம்கொண்டவர். உயரமாக இருப்பவர்கள் முகத்தைப் பார்த்து அதிக பலத்துடன் எளிதாகக் குத்துக்களை இறக்க முடியும். முழு நேரமாகக் குத்துச்சண்டைக் களத்திலேயே கிடப்பவர். மேரி கோமோ மூன்று குழந்தைகளின் தாயார். 34 வயதானவர். கடுமையான பயிற்சியும் உழைப்பும் அவரை ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியனாக்கியது.

மேரி கோம் கூறுகையில் “இப்போது ஆசியக் குத்துச்சண்டைப் போட்டிகூட உலகக் குத்துச்சண்டைப் போட்டிக்கு நிகராகத்தான் இருக்கிறது. 48 கிலோ பிரிவில் கடந்த ஏழு வருடங்களாக என்னுடன் மோதியவர்கள், எனக்கு சரிநிகரான உயரம்கொண்டவர்கள். இந்த முறை கிம் யாங் என்னைவிட அதிக உயரமாக இருந்தார். இளவயது என்பதால் சற்று ஆக்ரோஷமாகவும் காணப்பட்டார். ஆனால், அனுபவம் எனக்குக் கைகொடுத்தது. ஒவ்வொரு பதக்கமுமே எனக்கு ஸ்பெஷல்தான். எம்.பி-யாக இருந்துகொண்டு பதக்கம் வெல்வது சற்று வித்தியாசமான தருணமாகத் தெரிகிறது'' என்கிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement