வெளியிடப்பட்ட நேரம்: 11:48 (11/11/2017)

கடைசி தொடர்பு:11:48 (11/11/2017)

மூடப்படும் போராட்டக்களங்கள்... அல்லது வாடகையாக ரூ.1.5 லட்சம் கொடுங்கள்... அத்துமீறும் அரசு!

ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சியில் காவல்துறையினர்...

னி மனித பிரச்னை என்றாலும் சரி; பொதுப் பிரச்னை என்றாலும் சரி, அதற்கான தீர்வை எட்டுவதற்கான சிறந்தவழி போராட்டம் மட்டுமே. தவறு செய்வது அரசே ஆனாலும் போராட்டங்களின் மூலம் அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தொடர் போராட்டங்கள் பல நாடுகளின் வரலாற்றையே அடியோடு மாற்றி எழுதியிருக்கின்றன. நம் உரிமையைப் பெற வேண்டுமானால், அதற்காக நாம் போராடித்தான் ஆகவேண்டும். மக்களின் போராட்டத்துக்கு பல நாடுகள் மதிப்பளித்து, அவர்களின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கின்றன. ஆனால், 'இந்தியா போன்றதொரு நாட்டில் போராட்டம் என்ற பெயரைக் கேட்டாலே போராட்டக்காரர்கள் மீது எந்த வழக்கு பதியலாம்; அவர்களை எந்த சிறைக்கு அனுப்பலாம்' அரசு சிந்தித்து செயல்பட்டு வருகிறது. இத்தனை நாட்களாக போராட்டக்காரர்களை மட்டுமே குறிவைத்து வந்த அரசு, தற்போது போராட்ட இடங்களைக் குறிவைத்து அப்பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து விடுகிறது. இதற்கு மிகச் சிறந்த உதாரணம் சென்னை மெரீனா. அந்த வரிசையில் இந்தியாவின் பிரசித்தி பெற்ற போராட்டக்களமான டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.

ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சியில் காவல்துறையினர்...

நாட்டின் தலைநகரமான டெல்லியின் முக்கியப் பகுதியாக ஜந்தர் மந்தர் பகுதி விளங்கி வருகிறது. காரணம், தனி மனிதன் தொடங்கி சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள்வரை அனைத்துத் தரப்பினரும் ஆர்ப்பாட்டங்கள், தொடர் போராட்டங்கள் என பல நாள்கள் ஏன் மாதக்கணக்கில்கூட இப்பகுதியில் போராட்டம் நடத்திய வரலாறு ஜந்தர் மந்தருக்கு உண்டு. அண்மையில், தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் 141 நாள்கள் போராடியும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. தமிழக வாள் வீச்சு வீரர் டேவிட்ராஜ் மதுவுக்கு எதிராக 195 நாள்களாக இதே ஜந்தர் மந்தரில் போராடி வருகிறார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பலர் இப்பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இனி யார் நினைத்தாலும் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியாது. காரணம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அக்டோபர் மாதம் வெளியிட்ட உத்தரவுதான்.

"போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் செய்வதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. அதனால் இப்பகுதியில் இனி போராட்ட்டம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட வேண்டும். டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி மற்றும் டெல்லி காவல்துறை ஆணையர் உடனடியாக போராட்டங்கள் அனைத்தையும் நிறுத்த வேண்டும்" என்று உத்தரவிட்டது. இதனால்,  ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீஸார் அடித்து விரட்டியதுடன், அவர்களை  வலுக்கட்டாயமாக அப்பகுதியை விட்டு வெளியேற்றினர். 

'தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும்' என்று வலியுறுத்தி, கடந்த 195 நாள்களாக ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வாள் வீச்சு வீரர் டேவிட் ராஜிடம் பேசினோம். "அக்டோபர் 30-ம் தேதி காலை 6 மணிக்கு கடுங்குளிரில் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் வந்து அனைத்து போராட்டக்காரர்களையும் எழுப்பி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கூறி மிரட்டினார்கள். ஆனால், போராட்டக்காரர்கள் யாரும் கிளம்பவில்லை. 'இது போராடுவதற்காக அரசாங்கத்தால் ஒதுக்கித் தரப்பட்ட இடம்' என்று போராட்டக்காரர்கள் சொன்னார்கள். உடனே அனைத்து போராட்டக்காரர்களையும் 'தரதர'வென்று இழுத்துச் சென்று போலீஸ் வேனில் ஏற்றினார்கள். முரண்டு பிடித்தவர்களை அடித்து இழுத்துச் சென்றார்கள். போராட்டக்காரர்களின் விளம்பர பதாகைகள், ஆடைகள் என அனைத்தையும் கிழித்து தூக்கி எறிந்தார்கள். 

ஜந்தர் மந்தரில் போராட்டக்காரர்களை வெளியேற்றும் முயற்சியில் காவல்துறையினர்...

'ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், கடந்த 850 நாட்களுக்கும் மேலாக போராடி வந்தனர். அவர்கள், 'போராட்டக் களத்தை விட்டு வெளியேற முடியாது' என்று சொல்ல, காவலர்கள் அவர்களை கடுமையாக தாக்கி வேனில் ஏற்றினார்கள். ராணுவ வீரர்களுக்கு சலுகைகள் செய்வேன். ராணுவ வீரர்களுக்கு அதிக மரியாதைகள் தரப்படும் என்று சொல்லி சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் மோடி. அதுமட்டுமல்லாமல் தற்போது அரசு எடுத்துவரும் புதிய இந்தியா திட்டங்களுக்கு எதிராக மக்கள்  கருத்து கூறினால் "எல்லையிலே ராணுவ வீரர்கள்... "என்று ஆரம்பித்து கதை சொல்லுகிறார்கள். ஆனால் அன்றைய தினத்தில் ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளை காவல்துறையினர் கேவலப்படுத்தி அடித்து இழுத்து சென்று வெளியேற்றினார்கள். இனி இந்த அரசு ராணுவ வீரர்களின் பெருமை பற்றி பேசுவதற்கு தகுதியே கிடையாது. 

போராட்டக்காரர்களின் வெளியேற்றத்துக்கு பின் ஜந்தர் மந்தர்...

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியை விட்டு வெளியேற நவம்பர் 4-ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்த நிலையில், அக்டோபர் 30-ம் தேதியே அப்பகுதியில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.'இனிமேல் எந்தப் பகுதியில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவது?' என்று போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த காவல்துறையினர், 'டெல்லி ராம் லீலா மைதானத்தை போராட்டத்திற்காக மாநகராட்சி ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அங்கு சென்று போராடுங்கள் என்றனர்.

தொடர் போராட்டத்தில் டேவிட்ராஜ்...

தொடர் போராட்டத்தில் டேவிட்ராஜ்...

சரி என்று அங்கு சென்றோம்  'ஒரு நாளைக்கு 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை மாநகராட்சிக்கு பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் இங்கு போராட்டம் நடத்த முடியாது' என்று  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்'. ஜந்தர் மந்தரில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் நான் இங்குள்ள சாலைகளில் அமர்ந்து போராடி வருகிறேன். ஆனாலும், காவலர்கள் ஒவ்வொரு நாளும் எனக்கு இடையூறு அளித்துக் கொண்டேயிருக்கிறார்கள். உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவோரை ஒடுக்கி, போராடுவதற்கு இடம் கிடையாது என்று சொல்வது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. அரசின் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு எல்லாம், 2019-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்" என்றார்.

போராட்டக்காரகளை போராட்டத்தில் ஈடுபட விடாமல் தடைசெய்வது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், போராட்டக்களத்தையே தடை செய்வது இந்தியாவில் மட்டுமே நடைபெறக்கூடிய அவலமாகும்.


டிரெண்டிங் @ விகடன்