வெளியிடப்பட்ட நேரம்: 19:57 (12/11/2017)

கடைசி தொடர்பு:11:10 (13/11/2017)

177 பொருள்களின் ஜி.எஸ்.டி வரி குறைப்பு... குஜராத் தேர்தல் காரணம்?

ஜி.எஸ்.டி (GST) கவுன்சிலின் 23-வது கூட்டம் அஸ்ஸாம் தலைநகர் கெளகாத்தியில் சமீபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், அதிகபட்சமாக 28 சதவீத வரி விதிப்புக்கு உள்ளான 227 பொருள்களில் 177 பொருள்களின் வரியைக் குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.

GST

தினசரி வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களான ஷாம்பூ, பற்பசை, ஷேவிங் கிரீம், ஆப்டர் ஷேவிங் லோஸன், தின்பண்டங்களான சாக்லேட், சூயிங்கம் போன்றவற்றுக்கு விதிக்கப்பட்ட 28 சதவீத வரியானது, 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. தற்போது 50 பொருள்கள் மட்டுமே அதிகபட்ச வரி விதிப்பில் தொடர்கின்றன. 

மாதந்தோறும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்தான் என்றாலும், வரும் டிசம்பர் மாதத்தில் குஜராத் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இம்முறை அதிரடியாக, 177 பொருள்களின் வரி குறைக்கப்பட்டிருப்பது  அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என ஆங்கலச் செய்தி சேனல்களில் கருத்துக் கணிப்புகள் வெளிவந்தாலும்,  இந்தமுறை பா.ஜ ஆட்சி அமைப்பது அவ்வளவு சுலபமல்ல என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கருத்துக் கணிப்புகளை மத்திய அரசே பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. 

குஜராத் மாநிலம், சிறு வியாபாரிகள் நிறைந்த மாநிலம். பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பால் அங்குள்ள வியாபாரிகள் அரசு மீது கடும்கோபத்தில் உள்ளார்கள். சமீபத்தில் ஜி.எஸ்.டி-க்கு எதிராக குஜராத்தில் நடந்த ஊர்வலத்தில் பெருந்திரளாக வியாபாரிகள் கலந்து கொண்டது மத்திய அரசை யோசிக்க வைத்துள்ளது. கடந்த காலத்தைப் போல அவ்வளவு எளிதில் வெற்றிபெற முடியாது என்பதையும் மத்திய அரசு உணர்ந்துள்ளது.

"மண்ணின் மைந்தர் மோடி" என்ற ஒரே கோஷம் மட்டுமே ஆளுங்கட்சியை குஜராத்தில் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் காங்கிரஸ் துணைத் தலைவர்  ராகுல் காந்தி குஜராத்துக்கு மூன்று நாள் தேர்தல் சுற்றுப் பயணம் மேற்கொண்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.  பிரசாரத்தின்போது, "இந்தியப் பொருளாதாரம் உச்சகட்ட குழப்பத்தில் உள்ளது. பாரதிய ஜனதா ஆட்சியாளர்கள், பெரு முதலாளிகளுக்குச் சேவகம் செய்வதையேப் பிரதானமாகக் கொண்டுள்ளனர்" என ராகுல் காந்தி பேசியதற்கு பலத்த கைதட்டல் கிடைத்தது. 

சூரத் நகருக்குப் பிரசாரம் செய்யச் சென்றபோது, ஜவுளி மற்றும் வைரம் பட்டை தீட்டும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டார். ராகுல் காந்தியின் வருகை, குஜராத்திலுள்ள தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவை அதிகரித்துள்ளது. தன்னை `பப்பு... பப்பு’ எனக் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அண்மைக்காலமாக ராகுல் காந்தியின் ட்விட்டர் பதிவுகளும் அரசியல் நையாண்டியுடன் இருக்கின்றன. பண மதிப்பு நீக்கத்தின் ஓராண்டு நிறைவு தினத்தில் ராகுல் வெளியிட்ட ஒரு வீடியோ  செம்ம வைரல்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி வரி அமல்படுத்தப்பட்ட பின் மோடியின் சொந்த மாநிலத்தில் நடக்கும் இந்த தேர்தல் அரசின் நடவடிக்கைகளுக்கு மக்களிடையே எந்தளவு  வரவேற்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் அளவுகோலாகக் கருதப்படுகிறது. பாரதிய ஜனதா தொடர்ச்சியாக கோலோச்சி வரும் குஜராத்தில், இந்முறை தோல்வியடைந்தாலோ அல்லது இழுபறியில் வெற்றி பெற்றாலோ அது ராகுல் காந்தியின் அரசியல் பிரவேசத்துக்கு மக்கள் ஆதரவளித்ததாக அமைந்துவிடும். மேலும், மோடி அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டதாகவும் அமையக்கூடும் என்பதால்தான் தற்போது, மக்களையும், சிறு வியாபாரிகளையும் கவரும் விதத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கை கை கொடுக்குமா என்பதை தேர்தல் முடிவுகளே சொல்லும்.


டிரெண்டிங் @ விகடன்