சச்சினுக்கு ஒரு நியாயம், தோனிக்கு ஒரு நியாயமா? கபில்தேவ் சாடல் | Kabil Dev Supports Dhoni

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (12/11/2017)

கடைசி தொடர்பு:12:45 (12/11/2017)

சச்சினுக்கு ஒரு நியாயம், தோனிக்கு ஒரு நியாயமா? கபில்தேவ் சாடல்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தோனிக்கு  கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தோனி


தோனி சமீபகாலமாக டி20 போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனவே இளம் வீரர்களுக்கு வழி விட்டு அவர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண், ஆகாஷ் சோப்ரா போன்றவர்கள் வலியுறுத்தி இருந்தனர். முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலியும் இதே கருத்தைக் கூறி இருந்தார். இன்னொருபுறம்தோனியின் ஓய்வு பற்றிய விவாதங்கள்  நடைபெற்று வருகின்றன. இப்போது 36 வயதாகும் தோனி அடுத்த உலகக்கோப்பைப் போட்டி வரை விளையாடுவாரா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில், தோனிக்கு இந்திய முன்னாள் நட்சத்திர வீரரும், 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டனுமான கபில்தேவ் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “சச்சின் டென்டுல்கர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தபோது அவருக்கு வயது 38. அப்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. எனில் தோனியின் வயது பற்றி எதற்கு விவாதிக்க வேண்டும். தோனியை மாற்றினால் அவருக்குப் பதிலான மாற்று வீரராக யாரை சேர்ப்பீர்கள்? தோனியின் திறமை அணிக்கு முக்கியம். 2020ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் தோனி முக்கியப் பங்கு வகிப்பார் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

“ஹர்திக் பாண்ட்யாவிடம் அசாத்திய திறமை இருக்கிறது. அவர் என்னை விடவும் சிறந்த வீரராக வருவார் ”என்றும் கபில் தேவ் புகழாராம் சூட்டினார்.