ட்வீட் போடுவது யார்? மனம் திறந்த ராகுல்! | Rahul Gandhi Talks About His Twitter Team

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (12/11/2017)

கடைசி தொடர்பு:17:00 (12/11/2017)

ட்வீட் போடுவது யார்? மனம் திறந்த ராகுல்!

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தன் ட்விட்டர் கணக்கை கையாள்பவர்களின் விவரம் குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளார். 

ராகுல் காந்தி


காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலத்தில் கூடியது. இதையடுத்து அவர் தன் ட்விட்டர் கணக்கை கையாளக் குழு ஒன்றை வைத்திருப்பதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று அவருடைய ட்விட்டர் கணக்கை நிர்வகித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இதைவைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.   

ராகுல் காந்தி இப்போது குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் தன் ட்விட்டர் கணக்கு பற்றிய சில தகவல்களை வெளியிட்டார்.  ராகுல் கூறும்போது, ’என்னுடைய ட்விட்டர் கணக்கை கையாள 3, 4 பேர் கொண்ட குழு உள்ளது. என் பரிந்துரைகளை ஏற்று, அவர்கள் செயல்படுகிறார்கள். பிறந்தநாள் வாழ்த்து போன்ற வழக்கமான ட்வீட்களை அவர்கள் வெளியிடுவார்கள். நான் சில கூடுதல் தகவல்களை மட்டும் சொல்வேன். ஆனால், அரசியல் சம்பந்தமான ட்வீட்கள் அனைத்தும் நான் சொந்தமாக வெளியிடுவது தான்’  என்றார்.

மேலும் ராகுல் பேசும்போது, “பிரதமர் மோடியின் தவறுகளையும் பா.ஜ.க-வையும் நாம் விமர்சிக்கலாம். ஆனால், பிரதமர் என்ற பதவியை நாம் அவமரியாதை செய்யக்கூடாது. மோடி எதிரணியில் இருந்தபோது பிரதமரை அவமரியாதை செய்து பேசினார். ஆனால் அதை நாம் செய்யக்கூடாது. இதுதான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாடு’ என்றார்.