"கௌரி லங்கேஷைக் கொன்றவர்கள் சில வாரங்களில் பிடிபடுவார்கள்!" - கர்நாடக அமைச்சர் | "The killers of gauri lankesh will be caught in few weeks" - Karnataka Minister

வெளியிடப்பட்ட நேரம்: 19:11 (12/11/2017)

கடைசி தொடர்பு:10:37 (13/11/2017)

"கௌரி லங்கேஷைக் கொன்றவர்கள் சில வாரங்களில் பிடிபடுவார்கள்!" - கர்நாடக அமைச்சர்

கௌரி லங்கேஷ்

ர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி, அடையாளம் தெரியாத நபர்களால் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் என்னவென்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. இந்நிலையில், கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி "பத்திரிகையாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். இன்னும் சில வாரங்களில் இந்த வழக்கில் 100 சதவிகிதம் விசாரணை நிறைவடைந்து, குற்றவாளிகள் யார் என்பது தெரிவிக்கப்படும்" என்று தெரிவித்துள்ளதால், இவ்வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

பத்திரிகையாளரும், பிரபல கவிஞருமான லங்கேஷின் மகள் கெளரி லங்கேஷ். இவர் 1962-ம் ஆண்டு பிறந்தார். கவிதா மற்றும் இந்திரஜித் ஆகியோர் இவரின் உடன்பிறந்தவர்கள். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' பத்திரிகையில் தன் பணியைத் தொடங்கிய கௌரி, பின்னர், 'சண்டே', 'ஈநாடு' உள்ளிட்ட பத்திரிகைகளிலும், தொலைக்காட்சியிலும் ஊடகப் பணிகளை ஆற்றினார். இவரது தந்தை லங்கேஷ் 2,000-வது ஆண்டு மறைந்ததும், அவர் நடத்திவந்த லங்கேஷ் பத்திரிகையை சகோதரர் இந்திரஜித்துடன் இணைந்து நடத்திவந்தார். ஆரம்பம் முதலே இந்திரஜித்துக்கும், கௌரிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தன. 

சகோதரருடன் ஏற்பட்ட கருத்துமோதலைத் தொடர்ந்து, 'கௌரி லங்கேஷ் பத்திரிக்கே' என்ற பெயரில் தனியாக பத்திரிகையைத் தொடங்கி நடத்திவந்தார் கௌரி. இந்துத்துவ கொள்கைகள் திணிப்பை எதிர்த்த இவர், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகளின் கருத்துகளையும், அவர்களின் பல்வேறு நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சித்துவந்தார். அந்த அமைப்புகளுக்கு எதிராக தொடர்ந்து கட்டுரைகளையும் எழுதி தன் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தார் கௌரி லங்கேஷ். இதனால், அவர் வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளப்படுத்தப்பட்டார். கன்னடத்தில் பத்திரிகை நடத்திவந்தாலும், மற்ற பத்திரிகைகளிலும் மதவாதத்துக்கு எதிரான கருத்துகளை இவர் தொடர்ந்து எழுதிவந்தார். இதனால் பலமுறை கொலை மிரட்டல்களுக்கும் ஆளானார்.

கௌரி லங்கேஷ்

இந்துத்துவாவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை வெளியிட்டுவந்தது, கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியுடனான பிரச்னை என பல பிரச்னைகளில் அவர் சிக்கிக்கொண்டாலும் நேர்மையான பத்திரிகையாளராக வலம் வந்தார். பத்திரிகை ஆசிரியராகவும், கட்டுரையாளராகவும் வலம்வந்த கௌரி லங்கேஷை ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி அன்று, அவரின்  வீட்டுக்கு அருகே அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர். அவர் உடலில் ஏழு தோட்டாக்கள் பாய்ந்தன. குடும்பப் பிரச்னை காரணமாக அவர் கொல்லப்பட்டாரா? அல்லது அவரின் பத்திரிகைகளில் வெளியான எழுத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள், மர்ம நபர்களை ஏவிவிட்டு கௌரியைக் கொலை செய்தார்களா என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்துவருகிறது. 

கௌரி லங்கேஷ் கொலைகுறித்து விசாரணை நடத்த கர்நாடக மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக் குழுவை ஏற்கெனவே அமைத்துள்ளது. இந்தச் சிறப்புக் குழு, தீவிர விசாரணை நடத்திவரும் நிலையில், கொலையில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. 

ராமலிங்க ரெட்டிஇதுபற்றி கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், "கௌரி கொலையில் ஈடுபட்ட நபர்கள் பற்றிய துப்பு கிடைத்துள்ளது. ஆனால், அவர்கள் பற்றிய தகவல்களை இப்போது வெளியிட முடியாது. விரைவாகவும், தீவிரமாகவும் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகள் யார் என்பது பற்றிய விவரம் சில வாரங்களில் வெளியிடப்படும். கொலை வழக்கில் தொடர்புடையவர்கள்குறித்த 100 சதவிகித தகவல்கள் அப்போது தெரியவரும்" என்றார்.

துணிச்சல்மிக்க எழுத்தாளராகவும், அரசின் மிரட்டல்கள் உள்பட எதைக்கண்டும் அஞ்சாமல் தன் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்திய பத்திரிகையாளராகவும் திகழ்ந்த கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு, இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையிலும், அந்தப் பாதகச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு இன்னும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கக் கூடியது.

பேனா முனையை ஆயுதமாகக் கொண்டு, தங்களின் கருத்துகளை துணிச்சலுடன் எழுதியும், வெளிப்படுத்தியும் வருவோரை கத்தி முனைகளைக் கொண்டும், துப்பாக்கிக் குண்டுகளைக் கொண்டும் அவ்வளவு எளிதில் தாக்கிவிட முடியுமா? ஒரு பேனா முனை அழிந்தால், மீண்டும் அது பத்து பேனாக்களாக கூர்தீட்டப்பட வேண்டும். அடக்குமுறைகளுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக விமர்சனம் செய்த தைரியமான ஒரு பெண் பத்திரிகையாளரின் உயிரிழப்புக்குக் காரணமானவர்களை கூடிய விரைவில், இந்த உலகுக்கு அடையாளம் காட்டுவதுடன், அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்பதே கர்நாடக மாநிலம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் உள்ள அனைத்துப் பத்திரிகையாளர்களின் கருத்தாகவும், விருப்பமாகவும் உள்ளது. இதனை, விரைந்து அம்மாநில அரசு மேற்கொள்ளும் என நம்புவோம்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close