பலனளிக்குமா பிரதமர் மோடியின் பிலிப்பைன்ஸ் பயணம்?

மணிலாவில் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, புதுடெல்லியில் இருந்து, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றடைந்துள்ளார். அவர் அங்கு, ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்று உரை நிகழ்த்தவுள்ளார்.

பிலிப்பைன்ஸ் பயணத்துக்கு இடையே மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து, இந்தியாவுடனான அந்த நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் பேச்சுக்கள் நடத்தவுள்ளார்.

மணிலாவில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் 50-வது ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார். ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். மணிலாவில் இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமரின் இந்தப் பயணம் ஆசியான் நாடுகளுக்கு இடையே நல்லுறவை மேம்படுத்துவதுடன், உலக நாடுகளின் தலைவர்களிடையே இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கும் வழிவகை செய்யும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1981-ம் ஆண்டுக்குப் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்துவதன் மூலம் இந்தியாவின் அதிவேகப் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகளுடன் வர்த்தகம், பயங்கரவாத எதிர்ப்பில் ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற அம்சங்களும் பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, இருதரப்பு முதலீடுகளை பரஸ்பரம் அதிகரிப்பதுகுறித்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சு நடத்தவுள்ளார்.

பிரதமர் மோடி

இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள மோடி, அங்குள்ள நெல் ஆராய்ச்சி மையத்துக்கும் சென்று பார்வையிடுகிறார். மேலும், பிலிப்பைன்ஸ் நாட்டின்  அருங்காட்சியகத்துக்கும் செல்லவிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளனர்.

இந்தியாவில் 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நள்ளிரவு முதல் செயல்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை, கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி போன்றவற்றால், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் எதிர்பார்த்த அளவைக்காட்டிலும் குறைந்துள்ளதாக பரவலாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், டீமானிடைசேஷனின் பலன்கள் இந்தியாவில் கிடைப்பதற்கு இரண்டாண்டுகள் ஆகக்கூடும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், பிரதமர் மோடியின் பிலிப்பைன்ஸ் பயணம், நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வித்திடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவிர, அண்மையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பிரதமர் மோடி சிறப்பாக செயலாற்றுகிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இருதினங்களுக்கு முன் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபரைச் சந்திக்கவுள்ளார். மேலும், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களையும், மோடி இந்தப் பயணத்தின்போது சந்தித்து நடத்தவிருக்கும் பேச்சுகள், இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டுசெல்லுமா என்பதை எதிர்வரும் காலத்தில்தான் உறுதியாக உணர முடியும். 

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, பாஸிட்டிவ் நிலையை எட்டினால் மக்கள் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்....!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!