வெளியிடப்பட்ட நேரம்: 23:05 (12/11/2017)

கடைசி தொடர்பு:07:51 (13/11/2017)

பிலிப்பைன்ஸில் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஆசியான் மாநாட்டுக்காக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். 


ஆசியான் நாடுகளின் மாநாட்டுக்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மணிலா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மணிலாவில் நடைபெறும் ஆசியான் நாடுகளின் 50-வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளும் பிரதமர், அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். ஆசியான் - இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளின் மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார். மணிலாவில் இந்தியர்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆசியான் நாடுகளின் 50-வது ஆண்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு இரவு விருந்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அந்த விருந்தின்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்மதேவ், சீன பிரதமர் லீ கியாங், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்பை நாளை அதிகாரபூர்வமாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்துப் பேச உள்ள நிலையில், இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நிகழ்ந்தது. 

சமீபத்தில் வியட்நாமில் நடந்த ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய ட்ரம்ப், பிரதமர் மோடியை வெகுவாகப் பாராட்டிப் பேசியிருந்தார். அவர் பேசுகையில், நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் உள்ள மக்களை ஒருங்கிணைக்க பிரதமர் மோடி அரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். அதிகரித்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கான வாய்ப்புகளை பிரதமர் மோடி வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்’ என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.