’ரசகுல்லா யாருக்குச் சொந்தம்’ - மாநிலங்கள் இடையே இரண்டு ஆண்டுகளாக நடந்த போராட்டம்!

ரசகுல்லா, தங்களது பாரம்பர்ய உணவே என்று கடந்த 2 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்துக்கும் ஒடிசா மாநிலத்துக்கும் நடந்த சண்டை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. 

பாலில் செய்யப்படும் இனிப்பு வகை உணவுப் பொருளான ரசகுல்லா, தங்கள் மாநிலத்தின் கண்டுபிடிப்பே என்று கூறி ஆண்டுதோறும் ’ரசகுல்லா திவாஸ்’ என்ற பெயரில் ஒரு நாள் கொண்டாட்டங்களை ஒடிசா மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு தொடங்கியது. ஒடிசாவின் பூரி நகரில் 13-ம் நூற்றாண்டிலேயே ரசகுல்லா இருந்ததாகவும், பூரி ஜெகன்னாதருக்கு, லட்சுமி தயார் ரசகுல்லா கொடுத்ததாக வரலாறு இருப்பதாகவும் ஒடிசா கூறிவந்தது. ரசகுல்லாவின் வரலாற்றைக் கண்டுபிடிக்க ஒரு தனி கமிட்டியே நியமிக்கப்படும் என்று கடந்த 2015-ல் ஒடிசாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் அப்போதைய அமைச்சர் பிரதீப் குமார் கூறினார். 

ஆனால், ரசகுல்லா தங்கள் மாநிலத்தின் உணவே என்று கூறி மேற்குவங்கம் களத்தில் இறங்கியது. ரசகுல்லாவானது திரிந்த பாலில் செய்யப்படுவது என்றும், திரிவடைந்த பாலானது சுத்தமில்லாததாக் கருதப்படும் நிலையில், அது கடவுளுக்குப் படைக்கப்பட வாய்ப்பே இல்லை என்று மேற்குவங்கம் வாதாடியது. இந்த விவகாரத்தைச் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று மேற்குவங்க மாநில உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் அப்துர் ரசாக் மோலா கூறியிருந்தார். மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இனிப்பு தயாரிப்பாளர் நபீன் சந்திர தாஸ், கடந்த 1868-ல் ரசகுல்லாவைக் கண்டுபிடித்ததாகவும் அம்மாநிலம் கூறிவந்தது. 

மேற்குவங்க மாநில உணவு கலாசாரத்தின் அடையாளங்களுள் ஒன்று ரசகுல்லா என முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறிவந்தார். இந்தநிலையில், மேற்குவங்க மாநிலத்துக்கு ரசகுல்லாவுக்கான புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக மம்தா, ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். புவிசார் குறியீடு பெற்றுள்ள பொருள்கள் அந்தந்த பகுதிகளுக்கே சொந்தம். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் உள்ள தேயிலைக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதன்மூலம், வேறு இடங்களில் உற்பத்தியாகும் தேயிலையை டார்ஜிலிங் தேயிலை என்று விற்கமுடியாது. கடந்த 1999-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பலவகைப் பொருள்களுக்கான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தப் பொருள்களுக்கு சட்டரீதியிலான பாதுகாப்பு வழங்கப்படும். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!