'பத்மாவதி' படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! பெங்களூரிலும் போராட்டம்

தீபிகா படுகோன், ரன்வீர் சிங் நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. வடமாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இன்று கர்நாடகத் தலைநகர் பெங்களூரிலும் 'பத்மாவதி' படத்துக்குத் தடைகோரி போராட்டம் நடைபெற்றது.

பத்மாவதி திரைப்படம்


'பத்மாவதி' திரைப்படம், ஆரம்பத்திலிருந்தே ஒரு சில தரப்பினரிடையே எதிர்ப்பைச் சந்தித்துவருகிறது. ராஜபுத்திர ராணி பத்மாவதி, மொகலாய மன்னர் அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி இந்தப்படம் திரைக்கு வர இருக்கிறது. 

ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்துவருகிறார்கள். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி வரலாற்றைத் திரித்து, இந்தப் படத்தில் காட்சிகள் வைத்துள்ளதாக, அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ராஜஸ்தானில் இந்தப் படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த செட், சிலரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. படக்குழுவினர் தாக்கப்பட்டனர். இதனால், படம் ஆரம்பத்திலிருந்தே ஊடகக் கவனம்பெற்றுவருகிறது.

இந்நிலையில், படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ''ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம்'' என்று ராஜபுத்திர அமைப்புகள் போராட்டம் நடத்திவருகின்றன. இந்நிலையில் இன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவிலும் பத்மாவதி படத்தைத் தடை செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது. 'ராஜ்புத்திர கர்னி சேனா' அமைப்பு சார்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. ஏராளமானவர்கள் இதில் பங்கேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!