வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (15/11/2017)

கடைசி தொடர்பு:15:45 (15/11/2017)

அரசு நிலம் ஆக்கிரமிப்புப் புகார்! கேரள அமைச்சர் ராஜினாமா

அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் தாமஸ் சாண்டி, தன் பதவியை இன்று ராஜினாமாசெய்தார்.

தாமஸ் சாண்டி


கேரள அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவ,ர் தாமஸ் சாண்டி. இவர், தேசியவாதக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கூட்டணியில் இடம்பெற்றிருந்ததால், இவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது. தாமஸ் சாண்டி, குட்டநாடு தொகுதியைச் சேர்ந்தவர். அங்கு, இவருக்குச் சொந்தமான ஓய்வு விடுதி உள்ளது. இந்த விடுதிக்குச் செல்லும் வழிக்காக, இவர் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகப் புகார் எழுந்தது. அந்தப் பகுதி, அரசின் கட்டுப்பாட்டில் வரும் காயல் பகுதி என்று கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அனுபமா நடத்திய விசாரணையில், ஆக்கிரமிப்பு உறுதியானது. அவர், அரசுக்கு ஓர் அறிக்கையை அளித்திருந்தார்.

 அந்த அறிக்கைக்கு எதிராக தாமஸ் சாண்டி, கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அரசு அறிக்கைக்கு எதிராக அமைச்சரே மனுத்தாக்கல் செய்யலாமா என்று உயர் நீதிமன்றம் கண்டித்தது. இதனால், தாமஸ் சாண்டிக்கு நெருக்கடி அதிகரித்தது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், தாமஸ் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின. சொந்தக் கட்சியான தேசியவாதக் காங்கிரஸிலும் சாண்டிக்கு எதிரான குரல்கள் எழுந்தன. நெருக்கடி முற்றிய நிலையில், இன்று தாமஸ் சாண்டி கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து தன் ராஜினமா கடிதத்தை வழங்கினார்.