வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (16/11/2017)

கடைசி தொடர்பு:10:48 (16/11/2017)

குஜராத் தேர்தலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ‘பப்பு’! தேர்தல் ஆணையம் அதிரடி

மோடி - ராகுல் - குஜராத் தேர்தல்

குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, ஆளும் பி.ஜே.பி-யும், காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத் சட்டசபைத் தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பதில் பி.ஜே.பி. தேசியத் தலைவர் அமித் ஷா தீவிரமாக உள்ளார். மத்திய அமைச்சர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டு, பி.ஜே.பி. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். 

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, குஜராத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவருகிறார். அண்மையில் குஜராத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பி.ஜே.பி வெற்றிபெறும் என்று தகவல் வெளியான போதிலும், காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளால், பி.ஜே.பி. ரொம்பவே கலக்கம் அடைந்துள்ளது.

குஜராத்தைப் பொறுத்தவரை, டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. 

இந்தச் சூழலில், 'பி.ஜே.பி 'பப்பு' என்ற வார்த்தையை பிரசாரத்தின்போது பயன்படுத்தக் கூடாது' என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை விமர்சிக்கும் வகையில், தேர்தல் பிரசாரத்தின்போது, 'பப்பு' என்ற சொல்லை பி.ஜே.பி. உபயோகித்து வந்தது. இது எந்தவொரு தனிநபரையோ அல்லது அரசியல் கட்சியையோ குறிக்கும் சொல் அல்ல என்று பி.ஜே.பி. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலும், அந்த வார்த்தையைப் பயன்படுத்தக்கூடாது என்றும், அது தரம்தாழ்ந்த வார்த்தை என்றும் தெரிவித்து, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பி.ஜே.பி-யை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தேர்தல் ஆணையம்

சமூக வலைதளங்களில் ராகுல் பற்றி பிரசாரம் செய்துவரும் பி.ஜே.பி. ஆதரவாளர்கள், அவரை 'பப்பு' என்று குறிப்பிட்டு பதிவுகளைப் போட்டு வந்தனர். தவிர காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களும் இதே வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். குஜராத் மாநில தேர்தல் அலுவலகத்துக்கு பி.ஜே.பி. அளித்த விளம்பர வாசகங்களில் 'பப்பு' என்று சொல் இடம்பெற்றிருந்ததற்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்தது.

தேர்தல் தொடர்பான எந்தவொரு விளம்பரம் அல்லது ஆவணங்களானாலும், அதனை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் பெற்றே பிரசுரிக்க வேண்டும். அந்த அடிப்படையில், சமர்ப்பித்தபோதுதான் 'பப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இதனை பி.ஜே.பி-யின் குஜராத் மாநில மூத்த தலைவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இதுபோன்ற சூழ்நிலையில், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. சார்பில் சமூக வலைதளங்களில் இப்பிரச்னை சூடுபிடித்துக் கொண்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக தொடர்ந்து பி.ஜே.பி. ஆட்சியில் இருந்துவருகிறது. பிரதமர் மோடி மூன்று முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். எனவே, இந்த முறை எப்படியும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் பி.ஜே.பி. தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் பி.ஜே.பி. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிரமாக உள்ளார். இந்த இரு கட்சிகளின் போட்டியில், வெற்றிபெறப் போவது யார் என்பதை டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் குஜராத் மாநில மக்கள் தீர்மானிக்க உள்ளனர். குஜராத் தேர்தலில் முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது. இத்தேர்தலில் 'பப்பு' ஏற்படுத்தியுள்ள சர்ச்சை என்னவாகப் போகிறது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அதுவரை, குஜராத் மாநில மக்களோடு நாமும் பொறுத்திருப்போம்....!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்