வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (16/11/2017)

கடைசி தொடர்பு:19:25 (16/11/2017)

பருப்பு ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்!

பருப்பு வகைகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த கட்டுப்பாட்டுகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

ரவிஷங்கர் பிரசாத்


மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’அனைத்து பருப்பு வகைகளையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருப்புக்கு நல்ல விலை கிடைக்க இது உதவும். ஜி.எஸ்.டி-யின் கீழ் விலை குறைக்கப்பட்ட பொருள்களின் விற்பனையைக் கண்காணிக்கவும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கவும் ஆணையம் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வீடுகளின் பரப்பளவை அதிகரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது” என்றார். பருப்பு வகைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விவசாயிகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. மத்திய அமைச்சரவை இந்தத் தடையை நீக்கி இருப்பதன் மூலம் விவசாயிகள் உபரி பருப்பை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, லாபம் ஈட்ட முடியும்.